எங்கெங்கு பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது!

0
713

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுகளை சுமந்து நிற்கும் இந்த நாட்களில் முள்ளிவாய்க்கால் இறுதி நாள்வரை மக்களின் அவலங்களை சுமந்துசென்ற மருத்துவர்களின் பணிஎன்பதும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் இறுதிநாள்வரை அந்த மண்ணில் இருந்து பணிசெய்து, இன்றும் அந்த அவலங்களை சுமந்து புலம்பெயர்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற மருத்துவர் நா. வண்ணன் அவர்கள் ஈழமுரசுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து விடுபடாத நிலையில் உள்ள எம்மக்களுக்கு உங்களை அறிமுகம் செய்துவையுங்கள்…?
வணக்கம்! நான் தாயகத்தின் முல்லைத்தீவை சொந்த இடமாகக்கொண்டவன். தாயகத்தில் வன்னிப்பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் யுத்தகாலங்களிலும் யுத்தமில்லாதகாலங்களிலும் மருத்துவராகப் பணியாற்றியுள்ளேன். குறிப்பாகத் தமிழீழ சுகாதாரப் பிரிவினால் மருத்துவராகப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மருத்துவர் என்பதே எனது அடையாளம். தியாகதீபம் திலீபன் மருத்துவ சேவையில் மருத்துவராகக் கடமையாற்றியதுடன், அரச மருத்துவமனைகளிலும் மருத்துவராகக் கடமையாற்றியுள்ளேன். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். போராட்ட சூழ்நிலை காரணமாக உந்தப்பட்டு, விடுதலை அமைப்பின் பால் பற்றுக்கொண்டு, போராட்டத்தின் பின்னால் சென்று, எனது குடும்பத்தின் சகோதரர்களின் தொடுசலாக என்னையும் இணைத்துக்கொண்டு, பிற்பகுதியில் மருத்துவக்கற்கையைக் கற்று, மருத்துவராக வெளியேறி எமது மக்களுக்கு சேவையாற்றினேன். அத்தோடு தமிழர்தாயகம் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவனாகவே இருந்துள்ளேன். இதற்கு ஒரு முக்கிய காரணத்தையும் குறிப்பிடவேண்டும். எனது சிறுபராயத்தில் 1995 ஆம் ஆண்டு யாழ்.இந்துக்கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலம் யாழ் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் சிறிலங்காவின் புக்கார விமானம் குண்டு வீச்சுத்தாக்குதலை மேற்கொண்டதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டு, கணிசமான மக்கள் படுகாயமடைந்த சம்பவத்தை என்னால் அறியக்கூடியதாக இருந்தது. அந்தக்காலத்தில், மாணவர் அமைப்பினூடாக வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களைப் பராமரிக்கும் பணி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. எனக்கும் மாணவர் அமைப்பினூடாக யாழ்.போதனாவைத்தியசாலையில் காயமடைந்த மக்களை பராமரிக்கும் சந்தர்ப்பம் ஒருசில இரவுகள் கிடைத்தது. அந்த சம்பவத்தை எனது வாழ்நாளில் மறக்கமுடியாது என்றுதான் கூறவேண்டும். அதுதான் எனது வாழ்நாளில் அறிவுவந்த காலத்தில் முதன்முதலாகக் கண்ட படுகொலைச் சம்பவங்களாக, காயங்களாக இருந்துள்ளது. அதற்கு முன்னர் இந்திய இராணுவத்தின் காலப்பகுதியில் எனக்கு 9, 10 வயது இருக்கும் என நினைக்கின்றேன். எமது ஊரான முல்லைத்தீவிலே இந்திய இராணுவமும் தேசவிரோத குழுக்களும் இணைந்து ஒருவரை எமது வீட்டிற்கு அருகில் வைத்துப் படுகொலை செய்தார்கள், அதன் பின்னர் இந்திய இராணுவம் எமது வீட்டை முற்றுகையிட்டு, எனது சகோதரர்களை எனது கண்முன்னே மிகமோசமாகத் தாக்கி சித்திரவதை செய்தார்கள் இச்சம்பவங்களும் எனது மனதில் ஆறாத வடுக்களாகப் பதிவாகியிருந்தது. இந்திய இராணுவத்தினால் தாக்கப்பட்ட எனது ஒரு சகோதரன், விடுதலைப் புலிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.(வீரவேங்கை பரணி – 07.07.1991 நெடுங்கேணிப்பகுதியில் வீரச்சாவு) மற்றொரு சகோதரர் இறுதியுத்தத்தில் காணாமல் போய்விட்டார்.


நீங்கள் ஒரு மருத்துவராக உருவாகிய சந்தர்ப்பம் எப்படி உங்களுக்கு ஏற்பட்டது?
நான் ஒரு மருத்துவராகவேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. அதாவது நான் ஒரு மருத்துவராக உருவாகவேண்டும் என்ற கனவோடு பயணிக்கவில்லை. ஆரம்பகாலத்தில் தெரிவுசெய்யப்பட்ட முறையில் மருத்துவப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு களமருத்துவக்கற்கைநெறி, ஆரம்ப மருத்துவக்கற்கைநெறி என படிப்படியாக மருத்துவக் கற்கைகளைக்கற்று, பின்னர் ஒரு பொதுவைத்தியருக்குரிய கற்கைநெறியைப் பூர்த்திசெய்து, மக்களுக்கான ஒரு நிறைவான மருத்துவசேவையைச் செய்யக்கூடிய நிலைக்கு உருவாக்கப்பட்டேன். குறிப்பாக சொன்னால், மக்களிடையே இருக்கக்கூடிய நோய்களுக்கான சிகிச்சை முறைகள், அதற்கான மேற்சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், குழந்தை நோயியல் சம்பந்தமானது, மகப்பேறு சம்பந்தமான விடயங்கள் போன்றவற்றைக் கற்றபின்னர், மக்களிடையே முழுமையாக சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவராக வெளியே வந்தேன். மருத்துவப்பிரிவில் இருந்த மேலதிக மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் போன்றவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு, அதற்குரிய பொதுப் பரிட்சைகள் நிறைவுசெய்து, அதிலே போதுமான சித்திபெற்றபின்னர்தான் வெளியில் சென்று பணியாற்றுவதற்கான அனுமதி இருக்கின்றது. தேவையைக் கருத்தில் கொண்டே எனது பணி ஆரம்பமானது.
நான் தியாகதீபம் திலீபன் மருத்துவ சேவைப் பிரிவில் முதலாவது அணியில் வெளியேறியிருந்தேன்.
தியாகதீபம் திலீபன் மருத்துவமனையின் உருவாக்கம் குறித்தும் அது எந்தளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவந்தது பற்றியும் குறிப்பிடுங்கள்?
1996 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் பாரிய ஒரு பொருளாதாரத் தடைக்கு உள்ளாகிய பிரதேசமே வன்னிப்பிரதேசமாகும். மருத்துவப் பொருட்கள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே தடையாகத்தான் இருந்தன. எரிபொருள், இலத்திரனியல் பொருட்கள் பற்றிசொல்லவேதேவையில்லை. அவை ஆரம்பகாலம் முதல் தடையாகவே இருந்துள்ளன. பொருளாதாரத் தடைக்குமத்தியிலும் போராடிக்கொண்டே விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள். அவர்கள் சார்பாகவே மக்கள் வாழ்கின்றபொழுது, அவர்களுக்காகவே செயற்படவேண்டும் என்ற எண்ணககரு தமிழீழத் தேசியத் தலைவரிடம் தன்னிச்சையாகவே எழுந்த ஒரு செயற்பாடு, அதாவது தன்னிச்சையான செயற்பாடாக தேசியத் தலைவரால் தியாகதீபம் திலீபன் மருத்துவமனை உருவாக்கம் பெற்றது. இதன்மூலம் அடிப்படை மருத்துவ வசதியற்ற இடங்களுக்கே, போதுமான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுப்பதே இதன்நோக்கமாகும். ஒருநாடு முன்னேற்றமடையவேண்டும் என்றால், கற்பிணிப்பெண்களின் மரணவீதம், சிசு மரணவீதம் போன்றவை கணக்கெடுக்கப்படும். அதுகளை மையமாக வைத்தும், வன்னிப்பிரதேசம் பாம்புத் தொல்லைகள் நிறைந்த பிரதேசம். அத்துடன் 1995, 1996 காலப்பகுதிகளில் மலேரியாத் தொற்று மக்களிடையே பரவலாகக் காணப்பட்டது. இதற்கு தமிழீழ சுகாதாரப்பிரிவினரும், அரச சுகாதாரபிரிவும் வன்னியில் மலேரியாத் தொற்றே இல்லை எனும் அளவிற்கு கொண்டுவந்தமையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். டெங்கு தொற்று வன்னியில் எந்தப்பகுதிக்குள்ளும் பதிவாகவில்லை. தென்பகுதியில் கூட பாரிய தொற்றுநோய்கள் இருந்தன. ஆனால், அப்படியான தொற்றுநோய்களைக்கூட வன்னிப்பகுதிக்குள்வராமல் தடுத்து நிறுத்திய பெருமை தமிழீழ சுகாதாரப்பிரிவையும் ஏனைய மருத்துவ பிரிவுகளையும் சாரும். தொற்றுநோய்கள் வந்தபின்னர் அதனைத் தடுப்பதை விட வராமல் தடுப்பது இலகுவானது.
தியாகதீபம் திலீபன் மருத்துசேவையின் முதலாவது மருத்துவமனை ஒட்டுசுட்டான் கற்சிலைமடுப் பகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதனை அப்போது தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களும் தமிழீழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த வைத்தியர் சூரியகுமார் அவர்களும் மருத்துவமனைக் கட்டடத்தைத் திறந்துவைத்தார்கள். அதற்கு முன்னர் வன்னிப்பகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளை விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவிற்குட்பட்ட ஊரகவளர்ச்சிப் பிரிவின் உதவியுடன் இனங்காணப்பட்டு, நடமாடும் மருத்துவசேவையாக செய்துவந்திருக்கின்றோம். அப்படி தியாக தீபம் திலிபன் மருத்துவ சேவை மக்களிடையே தனது பணியைத் திறம்பட நடாத்திக்கொண்டிருந்தவேளையில்தான், கற்சிலைமடுப்பகுதியில் குறித்த முழுமையான மருத்துவமனை உருவாக்கம்பெற்றது. அதற்குப்பின்னர் நைனாமடு, பூநகரி, மாங்குளம், புளியங்குளம், மன்னார், வெற்றிலைக்கேணி, அளம்பில், நெடுந்தீவு, புங்குடுதீவு, திருகோணமலையில் பாட்டாளிபுரம், வாழைத்தோட்டம், மட்டக்களப்பில் கதிரவெளி, கொக்கட்டிச்சோலை, அம்பாறை உள்ளிட்ட அனைத்து தமிழீழ மாவட்டங்களிலும் 2002 இற்குப் பின்னரான சமாதான காலப்பகுதியில் தியாக தீபம் மருத்துவமனை உருவாக்கம் பெற்று சிறந்த மருத்துவசேவையை மக்களுக்கு வழங்கியது. அதுமட்டுமல்லாமல் நடமாடும் மருத்துவ சேவைகளும் இருந்துவந்துள்ளன. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அரசியல் துறைப்பொறுப்பாளர் கௌசல்யன் அவர்களின் பெயரில், கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவை உருவாக்கம்பெற்று, அது மட்டக்களப்பு மற்றும் வன்னியின் பல பகுதிகளிலும் தனது சேவையை ஆற்றியது.
வன்னிப்பகுதியில் உருவாக்கம்பெற்ற ஏனைய பிரிவுகளின் நிலை பற்றி…?
குறிப்பாக முதலில் ஊடகப்பிரிவைக்குறிப்பிடவேண்டும். ஊடகம் என்பது மிகவும் அவசியமானது. ஊடகம் ஆனது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இன்றியமையாததாக இருந்து வந்துள்ளது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் அதனை அறிந்து, உணர்ந்து சரியான முறையில் சரியான தகுதியை வழங்கி வளர்த்தெடுத்தவர். ஊடகம் இல்லையென்றால் இன்றுவரை எமது பிரச்சினையைக் கதைப்பதற்கு ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒரு பக்கக் கட்டுரையை வாசிப்பதைவிட ஒரு படம் அந்தச்செய்தியைச் சொல்லிவிடும். அதாவது ஒரு படம் சொல்லும் விடயத்தை எப்படிக் கத்திச்சொன்னாலும் எடுபடப்போவதில்லை. அப்படியான விடயங்களை வெளியில் கொண்டுவந்தது ஊடகத்தைச் சேர்ந்தவர்கள்தான். வன்னிக்குள் இருந்த ஈழநாதம், புலிகளின் குரல் இவற்றுடன் இருந்து இயங்கிய ஊடகவியலாளர்கள், இறுதிக்காலத்தில், அதாவது முள்ளிவாய்க்கால் வேளையில், அவர்கள் செய்;தியுடன் நிற்காமல், ஒரு காயப்பட்டவரைத் தூக்கிக்கொண்டுவந்து அவருக்கு சிகிச்சை கொடுக்கும் வரை, அதற்கான படத்தை எடுத்து வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார்கள். உதாரணத்திற்கு ஒரு செய்தியாளரைக் குறிப்பிடவேண்டும். ஆர்.பி.ஜி.செல் ஒரு பெண்ணின் காலிற்குள் புகுந்து வெடிக்காமல் நிற்கின்றது. ஒரு பெண் செய்தியாளர், அந்தப் படத்தை எடுத்துக்கொண்டு அந்தக் காயப்பட்டவரை மாத்தளன் மருத்துவமனையில் சேர்க்கின்றார். அந்த செல் காலில் புகுந்த வெடிக்கும் நிலையில்தான் நிற்கின்றது. அது ஓர் அபாயகரமான நிலைமை. அது வெடித்தால் இன்னும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம். அந்த நேரத்தில் வைத்தியர் கதிர்ச்செல்வன் மருத்துவமனையில் நிற்கின்றார். ஒரு மருத்தவருக்கு இராணுவ ரீதியிலான முன்னறிவு இருக்காது என்பதே உண்மை. பொதுவாக சிந்தித்தால் ஆர்.பி.ஜி. என்பது பெரிய போர் ஆயுதம். அந்த செல்லை குறித்த வைத்தியரும் மருத்துவப் பணியாளர் ஒருவரும் சேர்ந்து இரண்டாகக் கழற்றுகின்றனர். அதில் ஒருபக்கக் கால் பாதுகாக்கப்பட, மற்றைய கால் செல்லுடன் சேர்த்து வெட்டி அகற்றப்படுகின்றது. இதில் நேரடியாக சிகிச்சை வரை ஒரு செய்தியாளர் பங்குபற்றியிருக்கின்றார். இதனால்தான் இச்செய்தி வெளியில் வந்திருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பங்களில் கணிசமான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருக்கின்றனர். ஒரு செய்தியாளர், காயமடைந்தவரை தானே நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டுவந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இதில் ஈழநாதம், புலிகளின் குரல் இரண்டினது பணிகளும் குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்ந்து இடம்பெயரந்து குறித்த செய்திகளை வெளியுலகிற்கு கொண்டுசேர்க்கவேண்டும் என்பதில் இவர்களின் பணி குறிப்பிடத்தக்கது.
புலிகளின் குரல் பண்பலையில் ஒலிபரப்பவேண்டும் என்றால், குறிப்பிட்டளவு உயரத்தில் அதன் ஒலிபரப்பு கம்பம் இருக்கவேண்டும். இருந்தாலும் இராணுவத்தினர் குறிப்பிட்ட தூரத்தில் இருந்த போதும், புலிகளின் குரல் தனது செய்தி வீச்சைப் பரப்பிக்கொண்டிருந்தது. புலிகளின் குரல் 2009 மே 15 இரவு வரை ஒலித்துக்கொண்டிருந்தது. அத்தோடு தனது சேவையை அது நிறுத்திக்கொண்டது. ஈழநாதமும் அவ்வாறேதான் இறுதிவரை வெளயாகிக்கொண்டிருந்தது. ஊடகவியலாளர்களின் பணி குறிப்பிடப்படவேண்டியது. செய்தியை வெளியுலகிற்குகொண்டுவருவதற்காக எத்தனையோ செய்தியாளர்கள் சாவடைந்துள்ளனர். காயமடைந்துமுள்ளனர். இவர்களில் சத்தியமூர்த்தி போன்ற பல ஊடகவியலாளர் சாவடைந்து நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, விடுதலைப்புலிகளின் பெரிய பிரிவுகளைக் குறிப்பிடவில்லை. ஏனைய சில பிரிவுகளைக் குறிப்பிடுகின்றேன். முதாளர் பேணலகம், சிறுவர் இல்லங்கள், காயமடைந்த போராளிகளைப் பராமரிக்கும் இடமான நவம் அறிவுக்கூடம், முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளான போராளிகளைப் பராமரிக்கும் இடமான சிறி மருத்துவ முகாம், முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளான பெண்போராளிகளைப் பராமரிககும் இடமான மயூரி மருத்துவ இல்லம், பெண்கள் புனர்வாழ்வகத்தின் கீழ் இயங்கிய வெற்றிமனையையும் குறிப்பிடவேண்டும். அதாவது மனநலம் பாதிக்கப்பட்டு உறவினரால் கைவிடப்பட்டு நோய்வாய்ப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த உளவள சிகிச்சை அளித்து பேணி இயல்புநிலைக்கு கொண்டுவருவதே வெற்றிமனையின் இலக்காகும். பின்னர் இவர்கள் தமது ஆற்றுகைகளை வெளிக்காட்டிய சிறப்புக்களும் நிகழ்ந்துள்ளன. தனிப்பட்டவர்களின் வாழ்வில் வெற்றியைக்கொண்டுவந்த மனை. அப்படிப்பட்டவர்களை பாதுகாப்பாக காயமடையாமல் கொண்டுசெல்லவேண்டிய தேவை அந்தந்தப் பிரிவு சார்ந்தவர்களிடத்தில் இருந்தது. மூதாளர் பேணலகங்கள் கூட அவர்களை இறுதிவரை பாதுகாத்து காயமடையாமல் கொண்டுவந்து, இயலாதவர்களை கப்பலில் அனுப்பிவைக்கும் பணியும் இடம்பெற்றிருந்தது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை என்பன மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து கடைசிவரை பயணித்துள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை தெரியவில்லை.
தமிழீழக் காவல்துறையினரின் பங்கையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். காயமடைந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் வரும்போது, அதை ஒழுங்குபடுத்தவேண்டிய நிலை, தேவை இருந்தது. அதற்கு ஆளணிப் பற்றாக்குறை இருந்தது. காயமடைந்தவரைக் கொண்டுவரும் உறவினருக்கு மனவலி இருக்கும் தாங்கமுடியாத உணர்வு இருக்கும். அதைவிட அவர் ஏற்றுக்கொள்ளமுடியாத மனநிலைக்குள் இருப்பார். அப்படியானவர் ஒருவாகனத்தில் காயமடைந்த தனது குடும்ப உறுப்பினரை கொண்டுவரும்போது, அவரைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர் எதுவரை மருத்துவமனைக்குள் காயமடைந்தவரைக் கொண்டுவரமுடியுமோ அதுவரை கொண்டுவருவார். அந்த ஒழுங்குமுறையை தமிழீழக் காவல்துறையினர் திறம்பட செய்துள்ளனர். இந்த சந்தர்ப்பங்களில் பல காவல்துறையினர் வீரச்சாவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செல் விழுந்து வெடித்த இடத்தில் கூட தமிழீழ காவல்துறையினர் சீருடையுடன் நின்று வேலை செய்வதை படங்களில் பார்த்திருப்பீர்கள். முள்ளிவாய்க்கால் பாடசாலையில் முன்பகுதியில் செல்வீழ்ந்து வெடிக்கின்றது. அங்கு இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை உடனடியாக மாற்றப்பட்டு பாடசாலையின் பின்பக்கத்திற்கு மாற்றப்படுகின்றது. அந்த இடத்தில் காவல்துறையினர் சீருடையுடன் பணியாற்றுவதைக் காணக்கூடியதாக இருந்தது. மருத்துவமனைகளை உடனடியாக இடம்மாற்றுவதற்கு பூரண ஒததுழைப்பு வழங்கியது காவல்துறையினரே.
புலம்பெயர் நாடுகளில் வந்துபார்க்கும் போது புதுப்புதுத் தகவல்களை அறிக்கின்றோம். இவற்றை எங்கே கேட்டிருக்கின்றோம். பார்hத்திருக்கின்றோம் என்றால், அதை வன்னியில் தான் அறிந்திருக்கின்றோம். மருத்துவ ரீதியிலான விடயங்கள் என்றாலும் சரி இப்படியான அமைப்புக்கள் என்றாலும் சரி பெயர்தான் மாறுபடுகின்றதே தவிர விடயங்கள் ஒரேமாதிரித்தான் உள்ளன. அங்கே ஏற்கெனவே இப்படியான அத்திவாரங்கள் இருந்திருக்கின்றன. நாங்கள் இங்கு வந்தபின்னர்தான் அவற்றை உணரமுடிகின்றது.
இறுதியுத்த காலத்தில் நீங்கள் பெற்ற மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?
மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது என்று சொன்னால், அதாவது கடைசியுத்தத்தின் ஆரம்பநாட்கள், கடைசி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது கிழக்குமாகாணத்தில் என்றே சொல்லலாம். கிழக்கு மாகாணத்திற்கு முன்னதாக சில சம்வங்கள் இடம்பெற்றிருந்தாலும், யுத்தம் என்று ஆரம்பிக்கப்பட்டது கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் தான். மூதூர், மாவிலாறு பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளின் தொடர்ச்சிதான் முள்ளிவாய்க்கால். அந்தச்சண்டை ஆரம்பித்த காலப்பகுதியில் நான் கிழக்கு மாகாணத்தில் மருத்துவமனைகளில் மருத்துவராகக் கடமையாற்றியிருக்கின்றேன். பாட்டாளி,புரம் என்ற பகுதியில் மருத்துவராகக் கடமையாற்றியபோது, யுத்தம் ஆரம்பித்துவிட்டது. அதற:கு முன:னரே விமானத்தாக்குதலில் காயமடைந்த பலர் எமது மருத்துவமனைக்கு வந்திருக்கின்றார்கள். தொடர்ந்து மாவிலாறு, மூதூர் பகுதிகளில் வேறு வேறு திசைகளில் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. மாவிலாறை நிறுத்திவிட்டு மூதூர் பகுதியினால் இராணுவம் முன்னேறி வருகின்றது. அப்போது சில பகுதிகளை பாதுகாப்பு வலயமாக அறிவித்து, மக்களை அங்கே போகுமாறு இராணுவம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் பாட்டாளிபுரத்தை பாதுகாப்புவலயமாக அறிவித்து, சம்பூர், கூனித்தீவு, கட்டைபறிச்சான் போன்ற இடங்களில் இருந்த மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். பாதுகாப்புவலயமாக அறிவித்த பகுதிகளை நோக்கி இராணுவத்தினர் எறிகணைத்தாக்குதலை மேற்கொள்கின்றனர். அதிலே பெரும் எண்ணிக்கையான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இது கிழக்கு மாகாணத்தில் இராணுவநடவடிக்கைக்குப்பின் இடம்பெற்ற மக்கள் படுகொலையாகும். பின்னர் இராணும் ஒவ்வொரு இடமாகப் பிடித்துக்கொண்டு வருகின்றது. பின்னர் கதிரவெளிப் பிரதேசத்தில் பாடசாலையை மையப்படுத்திய பகுதியை பாதுகாப்பு வலயமாக இராணுவம் அறிவிக்கின்றது. கதிரவெளி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்டது. திருகோணமலை வெருகல் ஆற்றைத்தாண்டினால் மட்டக்களப்பு ஆரம்பிக்கிறது. அதற்குள் பெரும் எண்ணிக்கையான மக்கள் சேர்ந்துவிட்டார்கள். அந்தப்பகுதி மக்கள் அதைவிட கூனித்தீவு, சம்பூர், கட்டைப்பறிச்சான், பாட்டாளிபுரம், முகத்துவாரம், இலக்கந்தை போன்ற சின்ன சின்ன கிராமங்கள் நிறைய இருக்கின்றன. குறித்த பிரதேச மக்கள் நெரிசலாக கதிரவெளிப் பகுதியில் இருந்தபோது,ஒரு பிரதேசத்தை அழிப்பதற்கான தாக்குதல் முறையாகத் திட்டமிட்டு குறிப்பிட்ட ஒரு சதுரப்பரப்பை மையப்படுத்தி இயலுமானவரை செல்வீச்சு, விமானத்தாக்குதல் என குறித்த பாதுகாப்பு வலயப்பகுதியை மையப்படுத்தி நடாத்தப்படுகின்றது. அதாவது பல்குழல் பீரங்கி, ஆட்லறி எல்லாவற்றையும் ஒரு நிலைப்படுத்தி அரைமணிநேரத்திற்கு மேலாக சுமார் 600 முதல் 700 வரை செல்களை கொட்டுகின்றது. ஒரே நேரத்தில் அந்தப் பிரதேசம் வெடித்துச் சிதறுகின்றது. அங்கு காயமடைந்தவர்களை மீட்கமுடியாது, காயமடைந்தவர்கள் எழுந்து செல்லமுடியாமல் பெரும் எண்ணிக்கையானவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். உண்மையிலேயே இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எஞ்சியவர்கள் காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டுத்தான் ஓடினார்கள். பின்னர் வந்து பார்த்தபோது சிதறி சின்னபின்னமாகிக் கிடந்தார்கள். அவர்களைக் கணக்கெடுக்க முடியாமல் கூட்டிக் குவித்து எரித்தும்,வெட்டித்தாட்டுவிட்டுத்தான் செல்லமுடிந்தது. அடையாளம் காணப்படாமலே அத்தனைபேரின் மரணமும் இடம்பெற்றது. அந்த ஒரு நாள் மட்டும் 600 பேருக்கு மேற்பட்டவர்கள் பாரிய காயமடைந்த நிலையில் எமது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். சின்னச் சின்னகாயக்காரர்கள் எவரும் வரவில்லை. எமது மருத்துவமனையும் இதேபகுதியில்தான் இருந்தது. இந்தக்காலப் பகுதியில் நாங்கள் செயற்படும்போது, வைத்தியர் வரதராஜா அவர்கள், ஈச்சிலம்பற்று மருத்துவமனையைப் பொறுப்பெடுத்து இயங்கிக் கொண்டிருந்தார். அதற்குத் தாக்குதல் நடாத்தப்பட பின்னர் வாகரை மருத்துவமனைக்குச் சென்றார்கள். வாகரை மருத்துவமனைக்கு நாங்கள் காயமடைந்தவர்களைக் கொண்டுசென்றோம். அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியுடன், படகுமூலம் காயமடைந்தவர்களை வாழைச்சோனைக்கு அனுப்பிவைத்தோம். தொடர்ச்சியாக அங்கும் பல சம்பவங்களை சந்தித்தோம். அதேபோல பாற்சேனைப் பிரதேசமும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மக்கள் ஒன்றுகூடிய பின்னர் உச்சத்தாக்குதல் இடம்பெற்றது. அதிலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டுப் படகாயமடைந்தனர்.
எங்கெங்கு பாதுகாப்புவலயம் அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இராணுவம் தாக்குதல் நடாத்தியது. எங்கெங்கு வைத்தியசாலைகள் இருந்ததோ அங்கெல்லாம் இராணுவம் தாக்குதல் நடாத்தியது. அதுதான் முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற உண்மை.
(மேலும் பல அனுபவங்களுடன் அடுத்தவாரமும் தொடரும்)

சந்திப்பு: கந்தரதன்

(நன்றி:ஈழமுரசு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here