தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் மூன்று கடற்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் 72 மணி நேரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பேரில் மீண்டும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று கடற்படையினரும் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ரவிராஜின் குடும்ப நலன் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜாரானார். இவர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகையில்,
நடராஜா ரவிராஜ் கொலையில் சம்பந்தப்பட்டதாக 2006ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 12ஆம் திகதி மூன்று சந்தேக நபர்கள் இந்த நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்கள் பின்னர் நான்கு தவணைகளின் பின்னர் மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்
இப்பொழுது ஆட்சிமாற்றத்தின் பின்னர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தியுள்ளனர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களில் முதலாவது சந்தேக நபரான ஆஜர்படுத்தப்பட்டுள்ள கொமாண்டோ சம்பத் முனசிங்க 2008 ஆம் ஆண்டு தெகிவளையில் கடத்தப்பட்ட ஜந்து மாணவர்களில் கடத்தலில் சம்பந்தப்பட்டமைக்கு சான்றுகள் உள்ளனவென புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான நீதவான் நீதிமன்றில் சான்று அளித்துள்ளார்
எனவே, நடராஜா ரவிராஜ் கொலையிலும் தெகிவளையில் கடத்தப்பட்ட ஜந்து மாணவர்களின் கடத்தல்களிலும் பிரதான சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கடற்படை கொமாண்டோ சம்பத் முனசிங்கவிற்கும் மற்றைய இரண்டு சந்தேக நபர்களுக்குமான விசாரணைகளை ஒருமித்து விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டுமென புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டதுடன்
பிரதான நீதவான் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு விசாரணையில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி பாரப்படுத்தினார்
சந்தேக நபர்களான மூன்று கடற்படையினரையும மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமே பாரமளிக்கப்பட்டு நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் மேலதிக விசாரணை நீதிபதி நிரோசா பொ்னாண்டோ சித்திரை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்