வடக்கு மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கின்றது என்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் என்னாவதென்பதையும் வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளது. கூட்டமைப்பின் பலம் அரசாங்கத்திற்கு தெரியாவிடின் கடந்த கால தேர்தல் முடிவுகளை மீட்டுப்பாருங்கள் என தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவினையே எடுக்கும் எனவும் குறிப்பிட்டது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் எண்ணம் இல்லையென சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கூட்டமைப்பினரிடம் வினவிய போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
சிறீலங்கா அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் நடத்தாது இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நாம் சிறீலங்கா அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அதேபோல் வடக்கு மக்களின் எண்ணம் அவர்களின் ஆதரவு என்னவென்பது எமக்கு நன்றாகவே தெரிந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலமும் நம்பிக்கையும் எமது மக்களே இதை விளங்கிக் கொள்ளாத அமைச்சர்களின் நிலைப்பாடு தொடர்பில் நாம் கவலைப் படுகின்றோம்.
சிறீலங்கா அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் அரசாங்கத்திற்கு விலைபோன ஒரு சிலரை வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கின் மொத்த வாக்குளையும் வென்று விடலாம் என சிறீலங்கா அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால், வடக்கின் ஆதரவு தமிழ் மக்களின் தெரிவு என்னவென்பதை கடந்த கால மாகண சபைத் தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளை அரசாங்கம் ஒரு முறை மீட்டுப் பார்க்க வேண்டும்.
அதேபோல் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு மிகசரியானதும் தமிழ் மக்களின் நன்மையினை கருத்திற்கொண்டுமே முடிவெடுக்கும். இவ்விடயத்தில் பெருமையாக தீர்மானிப்போம்.
மேலும், பொது எதிரணியின் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புபடவில்லை. நாளை இன்று இடம்பெறவிருக்கும் பொது எதிரணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திலும் நாம் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.