தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்துவதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று மத்திய உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தமிழகம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் மிகப் பெரும் தாக்குதலை நடத்துவதற்காக லஷ்கர் இ தொய்பா அமைப்பு இதுவரை தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தது. தற்போது தீவிரவாதி லக்வி விவகாரத்தில் கடுமை காட்டி வருவதால் இதுவே தாக்குதலுக்கான தருணம் என லஷ்கர் அமைப்பு கருவதுதாக உளவுத்துறை அதிகாரிகள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தனர்.
தீவிரவாதி லக்வியை சிறையில் இருந்து விடுதலை செய்யவே கூடாது என்று பாகிஸ்தானுக்கு தொடர்ந்து இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில் தற்கொலைப்படை தாக்குதலையோ அல்லது சிலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தோ தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும் இந்தியாவின் நெருக்கடிகளுக்கு பணிந்து போகும் பாகிஸ்தான் அரசுக்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதும் லஷ்கர் இ தொய்பாவின் திட்டமாம். இதனால் நாட்டின் பதற்றமான பகுதிகளில் அனைத்து காவல்நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடல்வழி ஊடுருவி தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்கின்றனர் உளவுத் துறையினர்.
தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களே தீவிரவாதிகளின் பிரதான இலக்காக இருக்கக் கூடுமாம். குறிப்பாக தமிழகத்துக்குத்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனராம். இலங்கையில் இருந்து கடல் வழியாக பல தீவிரவாதிகளை அந்த அமைப்பு தமிழகத்துக்குள் ஊடுருவச் செய்துள்ளது. தற்போது இலங்கை அரசுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருவதை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்துவது என லஷ்கர் அமைப்பு முடிவு செய்துள்ளதாம்.
ஏற்கெனவே மீன்பிடி படகு மூலம் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நுழைய முயற்சித்தது முதலே குஜராத் கடற்பரப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதே பாணியிலான தாக்குதலை நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறதாம் லஷ்கர் அமைப்பு.