ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான சந்திப்பு வரும் ஜீன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. உலக சமாதானத்திற்கான முக்கிய தருணத்தை நாங்கள் உருவாக்க இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று சிறை கைதிகளை ட்ரம்பின் வேண்டுகோளை ஏற்று வடகொரியா விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து வடகொரியா அதிபர் உடனான சந்திப்பு குறித்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுருக்கிறார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன. ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தியது.
தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பெரிது உதவின.