ஏப்ரல் 23 ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள்.
கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
அந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருந்த அவர்களது சொந்த மண்ணுக்குச் செல்வதற்கும் அங்கு தங்குவதற்கும் கடற்படையினர் அனுமதி வழங்க மறுத்துவந்துள்ளனர்.
அந்தத் தீவில் பாடசாலைகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் கூட்டுறவு நிலையம் நெசவு நிலையம் மருத்துவ நிலையம் கிராமிய சபை போன்றவை அமைந்துள்ளன.
2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2015 இல் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் தங்களுடைய பகுதிக்குச் செல்ல முடியும் என அந்த மக்கள் நம்பியிருந்தார்கள்.
2016 முதல் 2017 வரை அமைச்சர்கள் அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் உட்பட பலருடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புகளின் பின்னரும் தங்களுடைய பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி இன்னமும் அந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை.
இயலாத நிலையில் அவர்கள் கடந்த ஒரு வருடகாலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்தப் போராட்டத்தின் பலனாகவும் அவர்களால் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை.
ஏப்ரல் 23ஆம் திகதி 2018 அவர்கள் சற்று வித்தியாசமான விடயத்தை முயற்சி செய்து பார்த்தார்கள் அனேக இலங்கையர்கள் முயற்சிக்காத ஒரு துணிச்சலான விடயத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
ஒரு சமூகத்தினர் தங்கள் நிலத்தினை மீளப்பெறுவதற்காக அனுமதியின்றி அங்கு தரையிறங்கி தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பது என்பது இலங்கை சமீபகாலத்தில் சந்தித்திராத ஒருவகை சாத்வீக நடவடிக்கை.