வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18 இல் நடைபெறவுள்ளன. வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இந்நினை வேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு விசேட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.கடந்த காலத்தில் இந்நிகழ்வுகள் வெவ்வேறாக நடத்தப்பட்டதால் தமிழர்களின் ஒற்றுமை பலவீனப்பட்டது. எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரவலத்தை நினைவு கூரும் நிகழ்வு இது என்பதால் சகலரும் ஒன்றிணைந்து தாயக வீரர்களை நினைவு கூரவுள்ளோம்.
இதற்கு பல்லைக்கழக மாணவர்களின் அனுமதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். நாளை (09) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுக் குழுவினருடன் இது பற்றிப் பேசி முடிவுகள் எடுக்கப்படும்.
இந்தக் கலந்துரையாடலில் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் அமைப்புக்களில் இருந்து இருவர் வீதம் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். நினைவேந்தல் நிகழ்வுகளை இம்முறை யாழ்.பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் வடமாகாண சபையுடன் இணைந்து
நிகழ்வுகளை அழகுபடுத்தல், நுழைவாயிலை வடிவமைத்தல், பிரதான சுடர் ஏற்றுதல், பந்தல் மற்றும் கதிரை ஒழுங்குகள், பொலிஸாரின் அனுமதி பெறல், போக்குவரத்து ஏற்பாடுகள், தாக சாந்தி உள்ளிட்ட பல ஏற்பாடுகளில்
இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தோம். மாணவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆகையால், நாளைய (09) கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுமென்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.