சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர். அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன் தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன்.
இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை எனக் கேட்டார்கள். எமது திறன்களை மேம்படுத்த சில வழிமுறைகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுத்துக் கூறினேன். அதனை ஏற்றுக் கொண்ட தூதுவர், எதிர்காலத்தில் இவைகுறித்து தமது நாடு கருத்தில் கொள்ளும் என குறிப்பிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.