தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படு வது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம்.
உத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசில்தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என ஜனாதிபதி கூறினார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களை மைத்திரி நேற்றுக்காலை சந்தித்துப் பேசினார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்பு முதற்தடவையாக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. இன்றைய அரசியல் நிலை தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவித்த அவர், உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் விளக்கினார்.அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் இரு வாரங்களில் இது முழுமையாகப் பூர்த்தியடைந்து விடும். 19வது திருத்தம் முழுக்க முழுக்க நாட்டு நலன் சார்ந்த திருத்தமாக இருக்கும். மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டு மக்களின் பார்வைக்கு இது விடப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தத்தில் பல்வேறு யோசனைகளை தான் முன்வைத்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, ஜனாதிபதியின் பதவிக்காலம், பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஆகியவற்றை 5 வருடங்க ளுக்குக் குறைக்க யோசனை தெரிவிக் கப்பட்டுள்ளது. 6 வருட பதவிக்காலம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. நாட்டு நலன் கருதி இந்த யோசனைகளை முன்வைத் திருக்கிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.