வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனவரி மாதமளவில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபா தொடக்கம் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சை மிளகாய் 20 தொடக்கம் 60 ரூபா வரை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் திண்ணைவேலி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 60 ரூபாவிற்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.
மட்டக்களப்பில் ஒரு கிலோ பச்சை மிளகாயை 20 ரூபாவிற்கு வியாபாரிகள் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
2020 ஆம் ஆண்டு புகையிலை செய்கையை தடை செய்யஅரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை அடுத்து, வட மாகாணத்தில் புகையிலை செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது பச்சை மிளகாய் மற்றும் மரக்கறி மாற்று பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பச்சை மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாய போதனா ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
மரக்கறி பயிர்செய்கையில் ஈடுபட்டு வரும் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் திட்டங்களை வகுப்பது சாலச்சிறந்தது.