ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கோவில்பட்டியில் தீக்குளித்த அதிமுக கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன்.
இவர் அதிமுகவை சேர்ந்தவர். மேலும் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது உடலில் பழைய துணிகளை சுற்றி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்த கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துசெல்வி என்ற மகளும், சேதுரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.
ஜெ.முதல்வராக வேண்டி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று அவர் தனது நண்பர்கள், வீட்டில் சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தான் அவர் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுக கவுன்சிலர் தீ வைத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.