படையினரது ஆக்கிரமிப்பிலிருந்த காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் முருகன் கோவில் பகுதியில் தொடர்ந்தும் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையை பாதுகாக்க கூட்டமைப்பு வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேசசபை முற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பௌத்த மக்களோ அல்லது படையினரோ வசிக்காத நிலையில் விகாரை அமைப்பு பணிகள் தொடர்கின்றன. ஆனால் வலி.வடக்கு பிரதேசசபை தலைவரும் மாவை சேனாதிராசாவின் செயலாளருமான சோ.சுகிர்தன் அது 2015 இனில் வெளிவந்த விடயம் தற்போது ஊடகங்கள் அதனை மீள தோண்டிவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மையில் மக்களிடம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும் போது விகாரைகள் இல்லாது போய்விடுமென படைத்தரப்பு வியாக்கினமளித்திருந்தது.ஆனால் விடுவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் தற்போது வரை விகாரையின் கட்டுமானப்பணிகள் படைத்தரப்பால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
உண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பல விகாரைகள் தொடர்ந்தும் பேணப்பட்டுவருகின்றது.அங்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் நிலைகொண்டுள்ள முப்படைகளை சேர்ந்தவர்களும் காவல்துறையினரும் வழிபாடுகளை நடத்திவருகின்றனர்.
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்திய கிராமம் கடந்த 2015 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ‘குமாரகோவில்’ அமைந்திருந்த நிலத்தில் அரச மரம் ஒன்றின் கீழ் சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டு படையினரால் வணங்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் படையினர் உயர்பாதுகாப்பு வலயத்தை பின்நகர்த்தியபோது பௌத்த விகாரை கைவிடப்பட்டிருந்தது.
‘குமாரகோவில்’ சிதைந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகின்ற போதும் கோவிலுக்கு முன்பாகவே தற்போது விகாரை அமைக்கப்பட்டுவருகின்றது.அதற்கு ‘கமுணு’ விகாரை என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பகுதி வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வரம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளிட்ட பல சிறப்பு மிக்க சைவ ஆலயங்களை கொண்ட புண்ணிய பூமியாக விளங்கும் நிலையில் பௌத்த விகாரை ஒன்றை அமைத்தமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கலின் ஒரு அங்கமென்பதில் மாற்று கருத்தில்லை.
ஆனால் கூட்டமைப்பு வசமுள்ள வலி.வடக்கு பிரதேசசபை குறித்த அங்கீகாரமற்ற விகாரைகள் பற்றி கண்டுகொள்ளாதேயிருந்துவருகின்றது.
அத்துடன் அதன் பிரதேசசபை தலைவர் அவ்விகாரைகள் பழையவை ஊடகங்கள் தேவையற்று கிளறுவதாக ஊடகங்கள் மீதே குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளார்.