ஜே.வி.பி யினர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின ஊர்வலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து கொண்டிருந்தார்.
ஜேவிபி மே தின பேரணி யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் றக்கா வீதியில் ஆரம்பமானது. இதில் ஜேவிபியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி யின் தொழிற்சங்கத் தலைவசரான கே.டி.லால்காந்த உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அங்கு திடீரென வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் ஜே.வி.பி.யின் தலைவர்களுடன் கைகொடுத்து இன்முகத்துடன் அவர்களை வரவேற்றதுடன் அவர்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொண்டார்.
இறுதிக்கட்ட போரின் போது, இனக்கொலையாளி மஹிந்த ராஜபக்சவிற்கு முழுமையான ஒத்துழைப்பை ஜே.வி.பி வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
அநுரகுமார திஸாநாயக்க, கே.டி.லால்காந்த உட்பட ஜே.வி.பி யின் முக்கியத் தலைவர்கள் அந்தக் காலகட்டத்தில் வடக்கு – கிழக்கிலுள்ள படைமுகாம்களுக்கும் நேரடியாக சென்று தமிழ் மக்கள் மீது படுகொலைகளைக் கட்விழ்த்துவிட்டுக்கொண்டிருந்த சிங்களப் படையினருக்கு தொடர்ச்சியாக உற்சாகம் அளித்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது .
இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கி விசேட நீதிமன்ற பொறிமுறையொன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் வலியுறுத்திவரும் நிலையில், அதற்கு இடமளிக்கக் கூடாது என்று உறுதியாகத் தெரிவித்துவரும் ஜே.வி.பி, இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மையை பாதிப்பதுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை காட்டிக்கொடுத்ததாக அமைந்துவிடும் என்றும் கூறி வருகின்றது. இதுவரை ஜேவிபியுடன் சுமந்திரன் கொண்டுள்ள உறவு இதன் மூலம் அம்பலமாகி உள்ளது .