பிரான்சில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் 2018 மே 1 தொழிலாளர் நாள் பேரணி பல்லின மக்களின் பிரமாண்ட பேரணியோடு எழுச்சியாக இடம்பெற்றிருந்தது.
பாரிஸ் நகரின் Bastille நினைவுத் தூபிப் பகுதியில் இருந்து பிற்பகல் 14.00 மணியளவில் ஆரம்பித்த பேரணி பாரிஸின் பிரதான வீதிகளின் ஊடாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் திருஉருவப்படம் தாங்கி மஞ்சள் சிவப்பு பலூன்கள் கட்டப்பட்ட ஊர்தியின் மத்தியில் பதாதைகளைத் தாங்கியநிலையில் கோசம் எழுப்பியவாறு மக்களும் செயற்பாட்டாளர்களும் அணிவகுத்துச் சென்றனர்.
வெர்சைல தமிழ்ச்சோலை மாணவர்களின் பறை இசை அணியினர், லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் இன்னியம் அணியினரின் இசை ஊர்வலத்தில் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளைத் தாங்கியிருந்ததுடன், ஒலி பெருக்கிகளிலும் உணர்வுமிக்க தமிழீழ எழுச்சி கானங்கள் ஒலித்தமை வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
பேரணியைப் பார்வையிட்ட வெளிநாட்டு மக்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பேரணி சென்றுகொண்டிருந்தபோது கிளர்ச்சியாளர்களின் வன்முறைகளால் அங்கு பெரும் மோதல், அசம்பாவிதங்கள் இடம்பெற்றன, கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. அவை பொதுமக்களின் மத்தியில் வீழ்ந்தன. இதனால் ஊர்வலத்தை இடைநிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவசரமாக இடைநடுவில் நினைவுக் கூட்டம் இடம்பெற்றது.
அங்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரை நிகழ்த்தியிருந்தார்.
அங்கு சாதகமற்ற நிலை தொடர்ச்சியாக ஏற்படவே நிகழ்வு தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு கண்டது.
(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சில் கடும் வன்முறைகளுக்கு மத்தியில் பல்லினமக்களுடன் 2018 இடம்பெற்ற தமிழர்களின் மேதினப் பேரணி!