தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையும், தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகமும் ,இணைந்து தமிழ்மாணி பட்டயக்கல்வி பட்டமளிப்பு விழா தமிழர்களின் தமிழ் உணர்வு விழாவாக மிகவும் சிறப்பாக கடந்த சனிக்கிழமை (28.04. 2018) 13.00 மணிக்கு பிரான்சின் தலைநகரம் பாரிசில் Eurosites மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
தமிழர் கலைகளான பறைமுழக்கத்துடனும், மங்கள நாதசுவரத்துடனும்,பொய்க்கால் குதிரையாட்டம் , போன்றவற்றுடன், நிகழ்வின் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், மதிப்புக்குரியவர்கள், கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் அன்றைய நாளில் பட்டம் பெற வந்திருந்த பிரித்தானியா, பிரான்சு, ,இத்தாலி, நோர்வே, நெதர்லாந்து, டொன்மார்க் நாடுகளிலிருந்து வந்தவர்களும் நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரங்கு நிகழ்வாக தமிழர் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்று சுடர்ஏற்றல் நிகழ்வு நடைபெற்றது. சுடர்களினை விழாவின் முதன்மை விருந்தினர் தமிழீழப்பெண்மணி திருமதி உதயா வேலுப்பிள்ளை அவர்கள் , பிரான்சின்( Inalco) அரசபல்கலைக்கழக இணைப் பேராசிரியர் தமிழ் ( மொழி, ,இலக்கியம்,நாகரீகம் தெற்காசியத்துறை) அவர்களுடன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள், பேராசிரியர் ஜெயச்சந்திரன் பத்மநாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள், ஜேர்மன் நாட்டிலிருந்து முனைவர். நா.சி. கமலநாதன் ஐயா அவர்கள், தாயத் தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களும், தமிழ்ச் சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன்அவர்களும் , அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.மகேசுவரன் அவர்களும், நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக் கழகப் பொறுப்பாளர் திருவாட்டி மேரி ஜெரால்ட், நோர்வே கல்விப் பொறுப்பாளர் திரு.நிர்மலன், டென்மார்க் கல்விப் பொறுப்பாளர், இத்தாலி மேல்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர் திரு.குமாரமூர்த்தியும், கீழ்ப் பிராந்திய பொறுப்பாளர் திரு. கோணேசுவரன், பிரித்தானியா கல்வி மேம்பாட்டுப் பேரவை பொறுப்பாளர் திரு.ஞானவேல் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர் திருவாட்டி நகுலா அரியரட்ணம் அவர்களும் பிரான்சு நாட்டின் பல்கலைக்கழக முக்கியமானவர்களும் சுடரினை ஏற்றி வைத்திருந்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை கீதம் ஒலித்தது தமிழால் தமிழர் வாழ்வை இணைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை தலைவன் தந்த வழியில் நடந்து தமிழை உயர்த்தும் அறிவியல் பேரவை என்ற கீதம் ஒலித்து மண்டபம் நிறைந்த கரவொலிகளுடன் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொறுப்பாளர் உரையாற்றியிருந்தார்.
வணக்க நடனத்தை ஆதிபராசக்தி நடனப்பள்ளி ஆசிரியர் திருமதி.மோகனரூபி மற்றும் அபிராமி நாட்டியாஞ்சலி பள்ளி ஆசிரியர் திருமதி.ரேணுகா சுரேசு அவர்களின் மாணவ மாணவியர் வழங்கியிருந்தனர்.
விருந்தினர் மதிப்பளிப்பு நடைபெற்றது. திருவாட்டி உதயா வேலுப்பிள்ளை அவர்கள் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பொறுப்பாளரினால் மதிப்பளிக்கப்பட்டார். விருந்தினர் திருமதி. உதயா அவர்கள் உரையும் ஆற்றியிருந்தார். தமிழின் பெருமை பற்றியும் தான் துணைப்பேராசிரியர் நிலைக்கு வந்துள்ளமையும் தன்தாய்மொழியில், சரித்திரத்தில் பற்றுக் கொண்டு அதன் தொன்மையை தேடுவதிலும், வெளிக்கொண்டு வருவதில் தான் ஈடுபடுவதும் அதேபோன்று எமது சந்ததியும் தொடர்ந்து தம் தமிழ் மொழிக்கு பெருமைசேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . பேராசிரியர்கள்,முனைவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். தொடர்ந்து பட்டமளிப்பை டென்மார்க் நாட்டிலிருந்து வருகைதந்தவர்கள் பேராசிரியர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். அவர்களுக்கான பதக்கங்களும், பட்டயமும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிக்கப்பட்டவர்களின் உரைகளும், இடம் பெற்றன. தொடர்ந்து நோர்வே, பிரான்சு, ,இத்தாலி, நெதர்லாந்து, பிரித்தானியா நாட்டவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு நாட்டினரும் உரையாற்றும் போது தமிழின் புகழ் பற்றியும் தமிழின் உயர்வு பற்றியும் பல கருத்துக்களை வழங்கியிருந்த போதும் பிரான்சு, இத்தாலி நாட்டின் பட்டத்துக்குரியவர்கள் கருத்துரைக்கும் போது தமிழின் பெருமைபற்றியும் இன்று அந்தப் பெருமையை பெற்றுத்தந்த எங்களதும் உலகத் தமிழர்களதும் நெஞ்சங்களில் ஒளிவீசிப்பறக்கும் தமிழீழ தேசியக் கொடியின்கீழ் வருங்காலங்களில் இந்த பட்டமளிப்பு , இடம்பெறவேண்டும் என்றும் அடுத்த ஆண்டில் இன்னும் பல நூற்றுக்கணக்கானவர்கள் பட்டம் பெறவேண்டும், பெறுவார்கள் என்றும் பலத்த கரவொலிக்கு மத்தியில் உரையை வழங்கியிருந்தனர்.
ஆர்ஜெந்தே தமிழ்பள்ளி மாணவிகள் நடன ஆசிரியர் திருமதி. பாமினி அவர்களின் நெறியாழ்கையில் மயில், காவடி நடனமும், வெர்சே மாணவர்களின் சிறப்பு மிக்க பறை வாத்திய முழக்கமான தப்பாட்டமும் , இடம் பெற்றது.
தொடர்ந்து இசைப்பிரியன் இன்னிசையும், நடன ஆசிரியை திருமதி.மஞ்சுளா இராஜலிங்கம் அவர்களின் நவீன நாகரீக இசைநடனமும், சோதியா கலைப்பள்ளி ஆசிரியை திருமதி. அனுசா மணிவண்ணன் அவர்களின் நெறியாள்கையில் கரகாட்டமும், எழுச்சி நடனத்தை செவ்ரோன் தமிழ்ச்சோலை நடன ஆசிரியை திருமதி. தனுசாமதி அவர்களின் நெறியாள்கையிலும், மற்றுமொரு பின்னல் நடனத்தை தனுசா மதியின் கவின் நடனக்கல்லூரி மாணவிகள் வழங்க, , கதகளியும் பரதம் கொண்ட சிறப்பு நடனத்தை சேர்ஜி தமிழ்ச் சோலை நடன ஆசிரியை திருமதி ரெணி செல்வாராசா வின் நெறியாள்கையில் மாணவிகள் வழங்கியிருந்தனர். தொடர்ந்து சிறப்புரைகள் இடம்பெற்றன. அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் உரையாற்றினார்கள். அவர்கள் தமது உரையில் இந்தப் பட்டமளிப்பின் சிறப்பைப் பற்றியும்,ஈழத்தமிழர்கள் தமிழை வாழவைப்பதில் எவ்வளவு தூரம் பாடுபடுகின்றார்கள் என்பதற்கு இன்றைய இந்த பட்டமளிப்பும் ஒழுங்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உணர்த்துகின்றது என்றார்கள்.
இதில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் தனது உரையில் தாய்தமிழ்நாட்டில் போராசிரியராக இருந்த போது கிடைக்காத சந்தோசத்தை இப்பொழுது தான் அடைகின்றேன் என்றும். காரணம் இன்று பட்டத்தை பெறும் பலர் தன்னிடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாது உங்களால் தான் இந்த பேறைப்பெற்றிருக்கின்றோம் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு தான் சொல்லிக் கொள்வது இந்த சரித்திர நிகழ்வை ஏற்படுத்தித்தந்ததும், தமிழீழத்திலும் பல பிள்ளைகளையும், புலத்தில் உங்களைப் போன்றவர்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையுடன் ,இணைந்து உருவாக்குவதற்கு காரணமானவர் எங்கள் தமிழர்கள் மனதில் என்றும் நிறைந்திருக்கும், தமிழர்கள் வாழ்வுக்கும், வீரத்திற்கும், உயர்வுக்கும் காரணமான நான் விரும்பும் தமிழீழத் தேசியத்தலைவர் தான் காரணம் என்பதை இந்த இடத்தில் சொல்வதில் பெருமையடைகின்றேன் என்றபோது அரங்கமே கரவொலியால் சிறிது நேரம் நிறைந்து போய்யிருந்தது. அதேபோலவே பலர் உரையாற்றும் போது மண்ணுக்காக, மொழிக்காக, மானத்திற்காக தம் இன்னுயிரை கொடுத்த உன்னதர்களுக்கும் தமது வணக்கத்தை செலுத்துவதோடு அவர்களே இன்று உலகெங்கும் தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் உயர்வுக்கு காரணம் என்பதையும் சொல்லியிருந்தார்கள்.
தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை மாணவிகள் செம்மொழியாம் தமிழ்மொழி என்ற பாடலுக்கு மிகவும் அழகான நடனத்தை வழங்கியிருந்தனர்.
21.00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் பட்டமளிப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.
ஆயிரத்தி ஐந்நூறு பேருக்கு மேல் கலந்து கொள்கின்ற இந்த மண்டபம் தொடர்ந்து நிறைந்தே காணப்பட்டது. மண்டபத்தில் ஒரு பகுதி வாழ்த்த வந்த எம் தேசமக்களாகவும் ஒரு புறமும், மறுபுறம் தமது பட்டத்துக்குரிய உடையையும், தொப்பாரத்தைத் தலையிலும் அணிந்து தமது உறவுகளுடன் அவர்கள் இருந்தமையும் அங்காங்கே அந்த உடைகளுடன் பல இளையவர்கள் சந்தோச மிகுதியால் நின்றதையும் ,கரைகாண முடியாத தாய்மொழியாம் தமிழில் படிப்பதற்கும், பட்டம் பெறுவதற்கு வயது ஒன்றும் தடையில்லை என்பதற்கமைய அரைநூற்றாண்டைக் கடந்தவர்களும் அங்கு பட்டத்தை பெற்றுக்கொண்டதையும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும் நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பட்டத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை பலநூற்றுக்கான இளையவர்கள் அதனை பார்த்து பூரிப்பு அடைந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த பட்டமளிப்பு விழா என்பது தனியே பட்டமளிப்பதற்கு மாத்திரமல்ல நம் தமிழர்கள் வீரத்திலும், விவேகத்திலும், தியாகத்திலும் மட்டுமல்ல தன் உயிரான தாய்மொழியை அழியவிடா, அழிக்க விடாது பாதுகாப்பார்கள், உலகில் உன்னதமானதொரு இடத்திற்கு கொண்டு செல்வார்கள். அந்நிய நாட்டில் பிறந்து தம் வாழ்விட மொழிபேசியும்,கற்றும் பலபட்டங்களை ஆண்டுதோறும் எமது தேசக்குழந்தைகள் பெற்றுக்கொண்டுதான் வருகின்றார்கள் ஆனால் அவைகளோ பெற்றோர்கள், சுற்றத்தவர்கள் மட்டத்திலே நிறைவடைந்து போகின்றன. தன்தாய் மொழியை கற்றவர்கள் பல அறிவாளிகளின் ஆசிகளையும், அறிவுரைகளையும், இனத்தின் வாழ்த்துக்களையும் ஒரு மானிடன் மண்ணில் பிறந்ததற்கான பெரும் பேற்றை இப்படியான நேரத்தில்தான் பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதே இன்றைய உண்மையான வரலாறாகின்றது. அப்படியொரு நிகழ்வாகவே இந்த பட்டமளிப்பு நிகழ்வு ஒவ்வோர் மனதிலும் நிறைந்திருந்தது. அதற்கேற்றார்ப் போல் மண்டபத்தை அண்ணாந்து பார்த்தபோது வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போல வீசியபல்லாயிரம் ஒளிகள் தமிழ்மாணி பட்டம் பெற்ற எங்கள் தேசக்குழந்தைகளை எங்கள் மண்ணின் தெய்வங்களான மாவீரர்களினதும், மக்களதும் வாழ்த்துக்களாக அது இயற்கையாகவே அமைந்திருந்தது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள், பிரான்சு மண்ணின் தமிழ் மக்கள், இங்கு வாழும் தமிழ்நாட்டு மக்கள் யாவரும் மிகுந்ததோர் மனநிறைவுடன் தாம் செல்வதாகவும், தம்மோடு இது நின்றுவிடாது தொடர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு இப்பணியை எடுத்துச்செல்வோம் என்றும் கூறியிருந்தனர்.