புதுக்குடியிருப்பில் நிலசுவீகரிப்பு முயற்சி : மக்கள் போராட்டத்தையடுத்து முயற்சி தோல்வி!

0
197

mullivaikkalவடக்கில்  இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் இன்று புதுக்குடியிருப்பில் மக்கள் போராட்டமொன்றையடுத்து கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிலஅளவையாளர்கள் குழுவொன்று தப்பித்து ஓடியுள்ளது.

ஒருபுறம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது மெதுவாக நடை பெற்று வருகின்றது. அதே வேளை கடந்த மூன்று வார காலப் பகுதியினுள் மட்டும் வடக்கில் 20 காணித் துண்டுகள் படைத் தரப்பின் பாவனைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன.
முன்னைய அரசின் காலத்தில் வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்கு மேலதிகமாக பல்வேறு இடங்களிலும் முப்படையினரின் தேவைக்காக காணிகள் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.    இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை, நில அளவை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கு காணி உரிமையாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தனர்.

இந்நிலையினில் இன்று புதுக்குடியிருப்பு பகுதியினில் சுமார் 50 ஏக்கர் காணியினை சுவீகரிக்க ஏதுவாக நில அளவைகளை செய்ய கொழும்பிலிருந்து  நிலஅளவையாளர்கள் குழுவொன்று வருகை தந்திருந்தது.முன்னதாக பிரதேச செயலகத்திற்கு குழு சென்றிருந்தது.எனினும் நில அளவை தொடர்பான விடயம் மக்களிற்கு கசிந்ததையடுத்து மக்கள் பிரதேச செயலகம் மற்றும் சுவீகரிக்கப்படவுள்ள காணி அமைந்துள்ள முகாம் என்பவற்றினை சுற்றி வளைத்துக்கொண்டனர்.

நீண்ட நேர இழுபறியின் பின்னர் அளவீட்டு பணிகளை கைவிடவும் கொழும்பு திரும்பவும்  நிலஅளவையாளர்கள் குழு கோரிக்கை விடுத்ததையடுத்து மக்கள் அவர்களை செல்ல அனுமதித்திருந்தனர். இதனால் நிலசுவீகரிப்பு முயற்சி தோல்வியினில் முடிவுற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here