இந்து ஆலயங்கள் உடைக்கப் பட்டு பெறுமதிமிக்க சிலைகள், நகைகள் மற்றும் ஆலயப் பொருட்கள் திருடப்படும் சம்பவமானது இந்து மக்கள் அனைவரையும் சினமடையச் செய்திருப்பதாக மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக மீண்டும் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள விலை மதிப்புள்ள பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தெனியாய நகரிலுள்ள முருகன் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க சிலைகள் திருடப்பட்டுள்ளதைப் போன்று அங்குள்ள தோட்டப் பகுதி ஆலயங்களும் உடைக்கப் பட்டு பொருட்கள் சிலைகள் திருடப்பட்டுள்ளன.
அதேபோல் ஆரையம்பதி கோவில்குளம் பழைய கல்முனை வீதியில் அமைக்கப் பட்டிருந்த கிழக்கின் முதல் பெண் சிற்றரசியின் சிலை கடந்த ஞாயிறு இரவு இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அந்த பிரதேசங்களில் உள்ள பல கோயில்கள் இதற்கு முன்னர் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.
இதேபோன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் இவ்வாறான ஈனச்செயல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதை வண்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோகின்றவர் களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்து ஆலயங்களை மீண்டும் உடைத்துப் பொருட்களை திருடும் கலாசாரத்தை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.