இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்து வரும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கைக்கு விஜயம் செய்ய மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தக் குற்றம், சித்திரவதைகள், சிறீலங்கா இராணுவத்தினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அடிக்கடி சர்ச்சைக்குரிய அறிக்கைகளை சூக்கா வெளியிட்டு வருகின்றநிலையில், அவர் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கடந்த ஜெனீவா அமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
சிறீலங்கா பேரினவாதிகளால் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்ற காரணத்தினால் அவர் இவ்விஜயத்தை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தம்மிடம் பாதிக்கப்பட்டோரின் சாட்சிகள் உள்ளதாக யஸ்மின் சூக்கா தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்.
குறிப்பாக கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் பின்னணியில் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டதாகவும், அவர்களுக்கான கட்டளைகள் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் அல்லது பாதுகாப்பு அமைச்சரிடமிருந்தே கிடைத்துள்ளதென தம்மிடம் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக கடந்த 23ஆம் திகதி பிரத்தானிய நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.