சிறீதர் தியேட்டரை ஈபிடிபியிடமிருந்து, இழப்பீட்டுடன் மீட்டுத் தருமாறு அதன் 6 கூட்டுச் சொந்தக்காரர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில்,வழக்குத் தாக் கல் செய்துள்ளனர்.
செல்லையா இரத்தினசபாபதி கைம்பெண் மகேஸ்வரி இரத்தினசபாபதி, இரத்தினசபாபதி மகேந்திரரவிராஜ், தயாளகுமார் பெண் மகேந்திரரவிராணி, ஜெகநாதன் பராசக்தி, இரத்தினசபாபதி தேவராஜ், இரத்தினசபாபதி ஸ்ரீதர் ஆகியோர் வெளிநாடுகளில் வசிப்பதால் தமது அற்றோனி தத்துவக்காரரான செல்லத்துரை நித்தியானந்தன் ஊடாக இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், சிறீதர் தியேட்டர் 1974 ஆம் ஆண்டை அண்மித்த காலப் பகுதியில் கட்டப்பட்டது. வடக்கில் நிலவிய போர் காரணமாக 1990ஆம் ஆண்டிலிருந்தோ அல்லது அதற்கு அண்மித்த காலப் பகுதியிலிருந்தோ சிறீதர் தியேட்டர் மூடப்பட வேண்டியதாயிற்று. போர் காரணமாக வழக்காளிகள் குடும்பமாக யாழ்ப்பாணத்திலுள்ள தமது வீட்டிலிருந்து வெளியேறி கடல்கடந்து குடிபெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள்.
1997ஆம் ஆண்டில் வடக்கில் சிவில் நிர்வாகம் மீளமைக்கப்பட்டிருந்ததோடு, வழக்காளிகள் சொல்லப்பட்ட சிறீதர் தியேட்டரை மீளத்திறக்க விரும்பினார்கள். 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் இருந்தோ எதிராளி தனது அரசியல் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினர்களுடன் சேர்ந்து வழக்காளிகளது அறிவோ, அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் சட்டவிரோதமாகவும் பலாத்காரமாகவும் சொல்லப்பட்ட வளவின் உடமையை தன் வசமாக்கிக்கினார் என்றும் சட்ட விரோதமானதும் சட்ட பூர்வமற்றதுமான இருப்பாட்சியில் அத்தகைய காலத்திலிருந்து இருந்து வருகிறார் என்றும் அவர்களுக்கு அறிய வந்தது.
1997ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலோ அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியிலோ இரண்டாவது வழக்காளியான இரத்தினசபாபதி மகேந்திரரவிராஜை தொடர்பு கொண்ட எதிராளி உண்மையில், தான் சொல்லப்பட்ட வளாகத்தில் சட்டவிரோத இருப்பாட்சியில் இருப்பதாக அவருக்கு உறுதிப்படுத்தினார்.
அந்த நேரத்திலேயே இரண்டாம் வழக்காளி அவரது சொல்லப்பட்ட வளவில் அவரது சட்டவிரோதமானதும் சட்டபூர்வமற்றதுமான இருப்பாட்சியை வன்மையாக ஆட்சேபிப்பதாக எதிராளிக்கு சுட்டிக்காட்டினார். ஆயினும் சொல்லப்பட்ட வளவில் எதிராளி தன்னுடைய அரசியல் கட்சியுடன் சேர்ந்து சட்டவிரோத இருப்பாட்சியை தொடர்ந்தார்.
எதிராளி, தனது அரசியல் கட்சியுடன் சேர்ந்து வழக்காளிகளுக்கு எந்தவிதமான இழப்பீட்டுச் செலுத்துகையும் இன்றி சொல்லப்பட்ட வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோத இருப்பாட்சியில் இருந்து வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நேரடியாகவும் அந்த நேரத்தில் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் ஊடாகவும் எதிராளிக்குப் பல்வேறு கடிதங்கள் அனுப்பியதோடு ஏனைய வடிவங்களிலான தொடர்பாடல்கள் மூலமும் சொல்லப்பட்ட வளாகத்திலிருந்து அவரும் அவரது அரசியல் கட்சியும் வெளியேறவும்; சொல்லப்பட்ட வளவின் வெற்று உடமையை தம்மிடம் ஒப்படைக்கவும் அவர்களது சொல்லப்பட்ட சட்டவிரோதமான மற்றும் சட்டபூர்வமற்ற இருப்பாட்சிக்காக இழப்பீட்டை செலுத்தவும் கோரிக்கைவிடுத்து வழக்காளிகளினாலும் அல்லது அவர்கள் சார்பிலும் செய்யப்பட்ட சொல்லப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராளி இணங்கி ஒழுகத் தவறிவிட்டார்.
வழக்காளிகள் இந்த வழக்கின் விடயப் பொருளின் பெறுமதி அல்லது முத்திரைத் தீர்வையில் நோக்கங்களுக்காக ரூபா நூறு மில்லியன் என்பதாக மதிப்பீடு செய்கின்றார். தீர்வை பதியப்படும் வரை 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் இழப்பீடாக மாதமொன்றுக்கு ரூபா 75 ஆயிரம், அதற்கான சட்ட வட்டியுடன் சேர்த்து செலுத்துமாறும்; அதன்பின்னர் முழுமையாகச் செலுத்தப்படும் வரையான கூட்டுத் தொகைக்கும்; எதிராளிக்கு எதிராகத் தீர்ப்பும், வழக்குச் செலவும், மன்று தகுந்ததெனக் காணும் இன்ன பிற உதவிகளையும், கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Home
ஈழச்செய்திகள் ஈபிடிபி ஆக்கிரமிப்பில் இருக்கும் சிறீதர் தியேட்டரை இழப்பீட்டுடன் மீட்கக் கோரி வழக்கு !