இந்தோனேசியா கிழக்கு பகுதியில் சுமத்ரா தீவின் வடக்குமுனையில் உள்ள ஆசே மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் தென்படுகின்றன.
அனுமதி இல்லாமல் பலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் பெட்ரோல் கிணறுகளை அமைத்து கள்ளத்தனமாக பெட்ரோல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பசி புட்டி கிராமத்தில் புதிதாக பெட்ரோலிய எண்ணை கிணறு தோண்டப்படுகிறது. சுமார் 250 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்ட இந்த கிணற்றில் இருந்து ஊற்றெடுத்து வழியும் கச்சா எண்ணையை பிடித்து செல்வதற்காக சில நாட்களாக ஆண்களும், பெண்களும் இங்கு முகாமிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணியளவில் அந்த பெட்ரோல் கிணற்றில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மிகப்பெரிய தீப்பிழம்புகள் எழுந்தன. விறுவிறுவென பரவிய தீயில் அருகாமையில் உள்ள 5 வீடுகள் நாசமடைந்தன. கச்சா எண்ணையை பிடித்து செல்வதற்காக காத்திருந்த சுமார் 50 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.