பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளியின் மூன்றாவது தடவையாக நடாத்திய ஊரகப் பேரொளி கிராமிய கலை நடனப்போட்டி – 2018.!

0
497


பிரான்சின் பாரிசு புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி சால்து பெத் மண்டபத்தில் 21.04.2018 சனிக்கிழமை ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி மூன்றாவது தடவையாக பழந்தமிழரின் கலைகளைக் கட்டிக்காக்கும் வகையிலும் அதனை எமது ஆடத்த தலைமுறையிடம் கையளிக்கும் முகமாக ஊரகப்பேரொளி எனும் ஊராக ஆடற்கலை போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியின் சிறப்பு நடுவர்களாக தாயகத்திலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நடுவர்கள் வருகைதந்திருந்தனர். தமிழர்கள் எங்களின் பாரம்பரிய அரிய கலைகளை தேடி ஆய்வுகள் செய்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு வரும் பெரும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசாரபீடம் பேராசிரியர் மதிப்புக்குரிய பாலசுகுமார் அவர்களின் தலைமையில் இப்போட்டிகள் நடைபெற்றிருந்தது. நிகழ்வின் ஆரம்பமாக சிறப்பு விருந்தினர்கள் நடுவர்கள், கட்டமைப்பு பொறுப்பாளர்கள் ரிரிஎன் உறுப்பினர்கள் பாரம்பரிய வாத்திய இசைகளுடன் அழைத்து வரப்பட்டனர். ரிரிஎன் குடும்பத்தினர் வாயிலில் உள்ள விளக்குகளை ஏற்றி வைக்க அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து விருந்தினர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். கிராமிய போட்டி நிகழ்வின் நடுவர்கள் மேடையில் மதிப்பளிக்கப்பட்டனர். ஊரகப்பேரொளிக்காக பிரான்சு கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பாடல் திரையில் ஒளிபரப்பாகியது. வரவேற்புரையை செல்வி.சசிதாரணி அவர்கள் வழங்க கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட பொண்டி மாநகர உதவி முதல்வர் மேடையில் மதிப்பளிக்கப்பட்டு உரையையும் ஆற்றியிருந்தார். அறிமுகவுரையை திருமதி. லதாராஐன் ஆற்றியிருந்தார். தமிழர்களின் வீரத்திலும், தீரத்திலும் உறைந்து போன முழவுக்கருவியான பறைஇசையுடன் ‘ கரையேற வேண்டாமோ” என்ற தலைப்பில் பாடல் இசைநிகழ்வு நடைபெற்றது. பல்வேறு இராகங்களைக் கொண்டு இயற்றப்பட்ட கிராமிய இசையில் பெரியவர்கள், இளையவர்கள் இணைந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து நடுவன் பிரிவுக்கான போட்டிகள் இடம் பெற்றன. இதில் 11 பிரிவுகள் பங்கு பற்றியிருந்தன. இடைவேளை விடப்பட்டன. தொடர்ந்து கீழ்ப்பிரிவுக்கான போட்டிகள் 10 பிரிவுகள் பங்கு பற்றியிருந்தன. தொடர்ந்து ரிரிஎன் தமிழ்ஒளி மலர் வெளியீடு நடைபெற்றது. தொடர்ந்து மேற்பிரிவுக்கான போட்டிகளும், உயர்பிரிவுக்கான போட்டிகளும் நடைபெற்றன. விருதினை பெற்றிட வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு குழு போட்டியாளர்களும் கடுமையான வெளிபாடுகளை காட்டியிருந்தனர். கண்களால் ஊசி எடுத்தல், தலையில் கரகத்துடன் சேலைஅணிவதும், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பாம்பு நடனம், போன்ற கிராமிய நடனங்களை மிகவும் அழகாகவும், விறுவிறுப்பாகவும் போட்டியாளர்கள் செய்திருந்தார்கள். முடிவில் பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு. பாலசுகுமாரன் கருத்துரைகளை வழங்கிருந்தார் மாணவர்களின் திறன்களையும், போட்டியில் வெற்றியாளர்கள் யாவரும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தமையும், தாம் நடுநிலமை வகிப்பதற்கு மிகவும் கடினப்பட்டதையும் தெரிவித்திருந்தார். சிறப்புரையை வழங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் தமிழர்கள் நாம் புலம் பெயர்ந்ததொரு வாழ்வுக்கு தள்ளப்பட்டாலும் வாழ்ந்தாலும் எமது பாரம்பரிய கலைகளை தமிழர்களின் பலத்திற்கும், உயர்வுக்கு காரணமாக இருந்த கலைகள் என்றும் மறையாது புதுவேகத்துடன் எமது இளைய தலைமுறை கையில் எடுக்க வேண்டும் என்ற அவா இப்பொழுது நிறைவேறிக்கொண்டிருப்பதும் அதற்கு பெரும் உறுதுணையாக எமது ஆசிரியர்கள் இருந்து வருவதும் ஒவ்வொரு ஆண்டும் இவர்களின் ஆற்றுகை மேன்மேலும் உயர்வான இடத்திற்கு செல்வதையும் பாராட்டுவதாகவும், தனியே இது மாத்திரமல்லாமல் எமது அடிப்படை உரிமைப்போராட்டத்திற்கும் சனநாயக அரசியல் ரீதியிலும் பலம் சேர்க்க வேண்டும் என்றும் அதற்கு ரிரிஎன் கடந்த காலங்களில் எவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் எமது தாகத்தை தீர்த்ததுவோ அதுபோல் ஒவ்வொரு வீட்டிலும் வலம் வரவேண்டும் என்றும் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 30 வது ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்து, மே 1ம் நாள் தொழிலாளர் தினப்பேரணியும், மே 18 தமிழின அழிப்பு நாள் பேரணியும் அதில் எமது மக்களதும், இளையவர்கள் பங்கு பற்றுதலின் அவசியம் பற்றி கூறியிருந்தார். போட்டியில் பங்கு கொண்டு வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு பரிசில்களை தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உப கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை, போட்டியின் நடுவர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர். நல்வாய்ப்பு சீட்டிழுப்பும் நடைபெற்றது. அதனைப் பெற்றுக் கொண்டவர் அப்பரிசுப் பொருளை தாயகத்தில் கல்விகற்கும் வறிய குடும்பத்திற்கு வழங்குமாறு கொடுத்திருந்தார்.
நன்றியுரையைத் தொடர்ந்து ஊரகப்பேரொளி 2018 ன் வெற்றியாளர்களாக ஆர்ஜந்தே தமிழ்ச்சோலை மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை ரிரிஎன் பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்கள் வழங்கி மதிப்பளித்தருந்தார்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உரைத்து நிகழ்வு இரவு 10.00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

வெற்றி பெற்றோர் விபரம்
கீழ்ப்பிரிவு
1ம் இடம் : Chelles தமிழ்ப் பள்ளி
2ம் இடம் : Drancy தமிழ்ப் பள்ளி
3ம் இடம் : Ivry-sur-Seine தமிழ்ப் பள்ளி

நடுவண் பிரிவு
1ம் இடம் : Cergy தமிழ்ப் பள்ளி
2ம் இடம் : Goussainville தமிழ்ப் பள்ளி
3ம் இடம் : Argenteuil தமிழ்ப் பள்ளி

மேற்பிரிவு
1ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
2ம் இடம் : Cergy தமிழ்ப் பள்ளி
உயர்பிரிவு
1ம் இடம் : Drancy தமிழ்ப் பள்ளி
2ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
3ம் இடம் : Versailles தமிழ்ப் பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here