யேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் காலமானார்!

0
258

akavai10யேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள்  திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

யேர்மனியில் தமிழை வளர்ப்பதற்கு யேர்மனி நாட்டில் 130 மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி, கலை, பண்பாட்டை வளர்த்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தாயகத்திற்க வரவழைக்கப்பட்டு அவரின் பணிக்காக மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

திரு. நாகலிங்கம் அவர்கள் தன் சொந்த முயற்சியால் யேர்மனியில் உள்ள ஹேகன் நகரில் 1986ல் தமிழ் பாடசாலைகளை ஒன்றை நிறுவினார்.

ஆரம்பத்தில் அதில் 10 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். பிறகு மூன்றே வருடத்தில் தன் அயராத உழைப்பினால் யேர்மனியில் 1989ஆம் வருடத்தில் 13 பாடசாலைகளை நிறுவியிருந்தார். இவர் தான் முதல் முதலில் தமிழ் பாடசாலைகளுக்கு பொது தேர்வினை யேர்மனியில் 1989ல் செயல்படுத்தினார். திரு.நாகலிங்கம் அவர்களை யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரிவின் பொறுப்பாளராக இக்காலக்கட்டத்தில் அறிவித்தது. 1990களில் இருந்து திரு. நாகலிங்கம் அவர்கள் தமிழ் மற்றும் கலாச்சார பாடசாலைகளை ஒன்றிணைத்து “தமிழாலையம்” பள்ளிகளாக உருவாக்கினார்.

அதன் பிறகு திரு. நாகலிங்கம் அவர்கள் யேர்மனி மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ் மொழி கல்வியை கொண்டு சேர்க்க உழைத்தார். இப்பொழுது யேர்மனியில் 130 மேற்பட்ட தமிழாலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன அதில் 6500 மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பள்ளிகளை நிர்வகிக்க 350 அலுவலர்களும், 650 ஆசிரியர்களும் உள்ளனர். திரு. நாகலிங்கம் அவர்கள் வாசவிலான், வலிகாமம், யாழ்ப்பானத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது ஆசிரியர் பயிற்சியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பாயின்றவர். 1979ல் யேர்மனிக்கு புலம்பெயர்வதர்க்கு முன்னால் மாட்லெய், பெரதேனியா, ஹட்டன், உரும்பிராய் ஆகிய இடங்களில் ஆசிரியர் சேவையை செய்தார்.

திரு. நாகலிங்கம் அவர்கள் ஒரு நாடக கலைஞர், இலங்கை தீவில் நிறைய மேடைகளில் தனது நாடக கலைகளை அரங்கேற்றியுள்ளார். திரு. நாகலிங்கம் அவர்கள் “தமிழாலையத்தின் தந்தை” என்றும் “தமிழ் மொழியின் பாதுகாவலர்”, ”தமிழேந்தல்” என்றும் யேர்மனி மற்றும் ஐரோப்பா கண்டத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் இவரை கெளரவிக்கின்றனர்.

17.12.2011 அன்று யேர்மனியில் உள்ள போகும் என்னும் நகரத்தில் யேர்மனி தமிழ்கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஐயா அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையினரால் அவரின் 25 ஆண்டு காலத் தமிழ்கல்விச் சேவைதனைப் பாராட்டி சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

உலகத்தமிழர் பேரமைப்பினால் அதன் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் யேர்மனியில் தமிழ்கல்விப்பணியில் வெள்ளிவிழாக்கண்டிருக்கும் திரு இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் பணியினைப் பாராட்டி உலகப்பெருந்தமிழன் என்னும் விருதினை அனுப்பிவைத்திருந்தார். அதனை அவர் சார்பாக காலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஐயாவுக்கு வழங்கி மதிப்பளித்திருந்தார்.

அத்துடன் யேர்மனியில் வாழும் தமிழ்மக்கள் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிக்கிளை அவரின் பணியினைப் பாராட்டி ஈழப்பெருந்தமிழன் என்னும் விருதினை வழங்கி மதிப்பளித்திருந்தனர்.

மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here