ஏவுகணை பரிசோதனைகளை இடைநிறுத்துவதாக வடகொரிய அறிவிப்பு !

0
509


ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட அதிபர் உத்தவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.
பேச்சுவார்த்தைக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டும் இல்லாது உலக வளர்ச்சிக்கு உதவும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here