மக்களுக்கு சேவை செய்ய நாம் யாவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டியது எமது கடமை!

0
164

மன்னார் நகர சபையின் புதிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்கும் நிகழ்வு நேற்று (20) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.லெம்பேட் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது  “பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி செய்வதே.இனம், மதம்,மொழிகளை மறந்து நகர மக்களுக்கு சேவை செய்ய நாம் யாவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டியது எமது கடமை” என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
“தேர்தல் காலங்களில் நாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். அந்த வாக்கின் வெற்றியின் அடிப்படையில் நகரத்தை அபிவிருத்தி செய்ய எம்மைப் பணித்துள்ளார்கள்.
பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி செய்வதே ஆகும்.
இனம்,மதம்,மொழிகளை மறந்து நகர மக்களுக்கு சேவை செய்ய நாம் யாவரும் கரம் கோர்த்து செயற்பட வேண்டியது எமது கடமை என நான் உணர்கின்றேன்.
நாம் அபிவிருத்திக்கு பொருத்தமானதும், நிறைவேற்றக் கூடியதுமான திட்டங்களை வகுத்து அவற்றை ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
எமது அரசியல் போட்டிகள் யாவும் தேர்தலுடன் முடிவடைந்து விட்டது. தற்போது எமது மன நிலைகளில் மாற்றம் தேவை. அப்போது தான் அபிவிருத்தி பாதையில் செல்ல முடியும்.
பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே வழங்கப்படுகின்றது. நல்ல சிந்தணையையும், நல்ல செயற்பாட்டையுமே மக்கள் விரும்புகின்றார்கள்.அதையே நாமும் முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே எமக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே அடுத்த 4 ஆண்டுகளுக்கு மன்னார் நகர சபையை நிர்வகிக்கவுள்ள உறுப்பினர்களாகிய நாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட்டால் தான் நாம் மன்னார் நகர மக்களுக்கு பணி செய்பவர்களாகத் திகழ்வோம்.
ஆகவே நகர சபையின் எல்லைக்குள் காணப்படும் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய என்னாலும், உங்களினாலும் நல்ல சிறந்த அபிவிருத்தித்திட்டங்கள் முன் மொழியப்பட்டு மக்களுக்கு பலன் கிடைக்க நாம் செயற்படுவோம்.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்து கூடி வாழ்ந்தால் கோடி நன்மை சேர்ந்து சென்றால் சேவை நன்மை, சேவை செய்தால் விருத்தி நன்மை என்று கூறிக்கொள்ளுகின்றேன்.”என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here