சிறீலங்காவிற்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்கா நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள சட்டமூலம் குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
சிறீலங்காவின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா 35 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உறுதிசெய்யவேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிசெய்து நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கும் இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதிசெய்யவேண்டும்.
சிறீலங்கா குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்கவேண்டும், யுத்தத்தின் இறுதி தருணத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடவேண்டும். படையினரின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
சிறீலங்காவின் படையினருக்கு என 500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறீலங்காவை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்கான நிதியை இலங்கைக்கு வழங்கவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.