பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டத்தின் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றன.
முதலில் பிரதம விருந்தினர்கள், பிரமுகர்கள் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்வில் பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.ஆறுமுகம் ஏற்றிவைக்க பிரெஞ்சு நாட்டுத் தேசியக்கொடியை பொண்டி நகரபிதா SYLVINE THOMASSIN அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியை பொண்டி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர் பொது திரு உருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 29.06.1998 திரியாய் திருகோணமலைப் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலில் வீரச்சாவடைந்த பாலேந்திரன் சிவப்பிரியன் அவர்களுடைய சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து சங்கங்களின் கொடி மற்றும் இல்லங்களின் கொடியேற்றப்பட்டது. சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. பாரதி இல்லம் (சிவப்பு), ஒளவை இல்லம் (நீலம்), திருவள்ளுவர் (மஞ்சள்) ஆகிய இல்லங்களிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
இல்லங்களைத் தரிசிப்பதற்கு பிரதமவிருந்தினர்களும் நடுவர்களும் சென்றபோது மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, மாவீரர்களுக்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்ததுடன், தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருந்தனர். விருந்தினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சிறப்பாகப் பதில்களை வழங்கியிருந்தனர். இல்லங்களும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இல்ல ஒழுங்கமைப்பில் முதலிடத்தை ஒளவை இல்லமும் (நீலம்) இரண்டாவது இடத்தை பாரதி இல்லமும் (சிவப்பு), மூன்றாமிடத்தை திருவள்ளுவர் இல்லமும் (மஞ்சள்) தமதாக்கிக் கொண்டன.
வழமையான போட்டிகளுடன் பார்வையாளர்களுக்கான சங்கீதக்கதிரை, வினோத உடை, சாக்கோட்டம் போன்ற போட்டிகளும் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
விநோத உடைப் போட்டியில், கார்த்திகைப்பூ (ஒளவை இல்லம்) முதலிடத்தையும், தாயை இழந்து தந்தை சிறைசென்ற சிறுமி (பாரதி இல்லம்) இரண்டாமிடத்தையும், பைத்தியக்காரன் (பாரதி இல்லம்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
போட்டியின் நிறைவில் முதலிடத்தை பாரதி இல்லமும் (சிவப்பு), இரண்டாவது இடத்தை ஒளவை இல்லமும் (நீலம்), மூன்றாவது இடத்தை திருவள்ளுவர் (மஞ்சள்) இல்லமும் பெற்றுக்கொண்டன.
மாணவர்களின் உடற்பயிற்சி அணிவகுப்பும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. நிறைவில் பொண்டி தமிழ்ச் சங்கத்தினால் விற்பனை செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டு அதிர்ஸ்டம் பார்க்கப்பட்டது.
இதேவேளை, பொண்டிப்பிரதேசத்தில் 12 முதல் 15 வயதுகொண்டவர்களும் 16 முதல் 19 வயது கொண்ட தமிழ்ச்சோலையில் கல்வி கற்கும் இளம் உதைபந்தாட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டப் போட்டி தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் 30 வது ஆண்டு நினைவாக 14.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றன. தாயவள் அன்னை பூபதியம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கும், மாவீரர்களின் பொதுப்படத்திற்கும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்றி மலர்வணக்கம் செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
முதற்தடவையாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன், பொண்டி தமிழ்சங்கம் இப்போட்டியை முன்னெடுத்திருந்தது. தமிழ்ச்சோலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் இந்த இளம் போட்டியாளர்கள் இரண்டு வயதுப்பிரிவுகளாக பிரிந்து போட்டிகள் நடைபெற்றன. திறான்சி, செல், லாக்கூர்னோவ், புளேமினல்,சார்சல், பொண்டி ஆகிய ஆறு தமிழ்ச்சோலையின் மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு இளம்வீரர்களும் தமது அணிக்கான உடையுடன் மிகவும் அழகாக மைதனத்தில் நின்றிருந்தனர். வயதுகுறைந்த இந்த இளம்வீரர்கள் மைதானத்தில் விளையாடும்போது பெற்றோர்களும், ஏனைய கழகவீரர்களும், பார்வையாளர்களும் மிகுந்த உற்சாகத்தை கரவொலி மூலம் கொடுத்திருந்தனர். காலை 10.30 மணி முதல் மாலை 19.30 வரை இப்போட்டிகள் நடைபெற்றிருந்தன. இப்போட்டிகளுக்கு இளம் வயது வந்த இளையதலைமுறை உதைபந்தாட்ட வீரர்களே மிகவும் நேர்த்தியாக தமது நடுநிலையை வகுத்திருந்தனர். மூன்றாம், இரண்டாம் முதலாம் இடத்திற்கான போட்டிகள் 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை பொண்டித் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை இல்லவிளையாட்டுப்போட்டியன்று மாலை முதல் இரவு ஒன்பது மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டுத்துறையினதும், பொண்டித் தமிழ்ச்சங்கத்தினதும் இம்முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எமது இளைய தலைமுறை அதற்குள் மூழ் கித்தத்தளிப்பதையும் அதிலிருந்து விடுபட முடியாது நிற்பதும் இதைக்கண்ணுற்ற பெற்றோர்களும் இவ்இளைய தலைமுறைய வளர்த்தெடுப்பதில் உள்ள சிக்கலில் இருந்து ஓரளவு விடுபட வைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்கு கைகொடுக்கும் ஒரு நல்ல செயற்பாடாகவே பெற்றோர்கள் இதனை கருதியிருந்தனர். இரண்டு நாட்களும் நேரடியாக கண்ணுற்ற வகையில் இதனை மிகவும் காத்திரத்துடன் பொறுப்புணர்ச்சியுடன் பெரும் திட்டமிடலுடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய பணியாகவே இது அமைந்திருந்தது . வருங்காலங்களில் அனைத்து தமிழ்ப்பாடசாலை இளம் மாணவர்களுக்கிடையே இப்போட்டிகள் இடம் பெற வேண்டும். நடைபெற்று முடிந்த உதைபந்தாட்டப் போட்டியில் 12 – 15 வயது வரை 1ம் இடத்தை செல் தமிழ்ச்சோலையும் 2ம் இடத்தினை சார்சல் தமிழ்ச்சோலையும் 3ம் இடத்தினை திரான்சி தமிழ்ச்சோலையும் பெற்றிருந்தனர். அதேபோல் 16 – 19 வயது வரை 1ம் இடத்தை பொண்டி தமிழ்ச்சோலையும் 2ம் இடத்தினை சார்சல் தமிழ்ச்சோலையும் 3ம் இடத்தினை திரான்சி தமிழ்ச்சோலையும் பெற்றிருந்தனர். இவர்களுக்கான பரிசில்கள் பொண்டி தமிழ்ச்சங்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தது.
தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு பொண்டியில் சிறப்புப்பெற்ற தமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லுநர் மற்றும் உதைபந்தாட்ட போட்டிகள்!