இரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தினால் மீண்டும்அதன் மீது தாக்குதல் தொடுக்கப்படும் !

0
168

சிரியா அரசு இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நேற்று (14) அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்சு நாடுகள் கூட்டாக நடத்தின. சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்நாடுகள் கூறின.
நேற்று இரவு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தினால் மீண்டும்அதன் மீது தாக்குதல் தொடுக்கப்படும்  என அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் சிரியாவை  எச்சரித்துள்ளார்.

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் கூறி இருந்தார் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்.
நேற்று மாலை வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில் இதைத் தெரிவித்த அவர் , பிரித்தானியா , பிரான்சு ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய) அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி கூறியுள்ளார். இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் நோக்கம் நிறைவேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுப் படையினர் சிரியாவில் அரசுக்கு சொந்தமான மூன்று இடங்கள் மீது சனிக்கிழமை குண்டு வீசினர். இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படும், இருப்புவைக்கப்படும் இடங்கள் என்று அவற்றை குறிப்பிட்டன.

இந்தத் தாக்குதலை மிகவும் கடுமையான முறையில் கண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் தெரிவித்தார்.
சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, அங்கு உள்ள தமது படையினர் தாக்கப்பட்டால் இராணுவ ரீதியாக பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது.

காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக தமது நியாய உரிமை உள்ள வலிமையை அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்சு ஆகியவை செயல்படுத்திக் காட்டியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்சு நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தியது வெற்றிகரமாக அமைந்ததாக நம்பிக்கை இருக்கிறது என பிரித்தானிய பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here