ஐ.நா உடன்பாட்டை இராணுவம் மீறிவிட்டது!

0
147

ஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறீலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல், லெபனானுக்கு, இராணுவத்தினரை அனுப்பியதன் மூலம், இந்த மீறல் இடம்பெற்றுள்ளதாக, ஜனாதிபதிக்கு , மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஐ.நா அமைதிப்படைக்கு தெரிவு செய்யப்படும் படையினருக்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் பெற்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், தலைவர் கலாநிதி தீபிகா உடகம, இதுதொடர்பாக, சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த புதன்கிழமை கடிததம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ”2017 டிசெம்பர் 21ஆம் நாளிடப்பட்ட கடிதம் ஒன்றுடன், 204 சிறீலங்கா இராணுவத்தினரின் விண்ணப்பங்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்திருந்தது.
எனினும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கான செயல்முறைகள் முடிய முன்னரே, 49 சிறீலங்கா இராணுவத்தினர் லெபனானுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி இராணுவத்திடம் விசாரித்த போது, லெபனானுக்கு ஒரு தொகுதி படையினர் அனுப்பப்பட்டு விட்டது உறுதியானது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெறாமல், ஐ.நா அமைதிப்படைக்கு எந்தவொரு படையினரையும் அனுப்ப முடியாது என்று தெரிந்திருந்தும், ஒரு தொகுதி படையினரை அனுப்பியதை அறிந்து நாம் ஆச்சரியமைடைந்தோம்.
லெபனானுக்கு அவசரமாக 49 படையினரை அனுப்ப வேண்டிய தேவை உள்ளதாக எமக்கு தெரிவிக்கப்படவில்லை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறாமல், ஐ.நா அமைதிப் படைக்கு அணியொன்றை அனுப்பியதன் மூலம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான உடன்பாட்டை இராணுவம் மீறியுள்ளது.
ஐ.நா அமைதிப்படைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களான, முப்படைகள், காவல்துறை என்பன, மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஒத்துழைக்க வேண்டியது முக்கியமானது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here