அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் “கருப்பின மக்களே! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை பிரகடனம் செய்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவதற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது ஐ.எஸ்.ஐ. தீவிரவாத இயக்கம்.
அமெரிக்காவில் மிசோரி மாகாணம், பெர்குசானில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் திகதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின இளைஞரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது.
அதுவும் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என நடுவர்கள் குழு 24-ந் திகதி, தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பானது ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொந்தளிப்பில் பெர்குசானில் கருப்பின கலவரம் நடந்து வருகிறது. கலவரக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். தொடர் பதற்றம் காரணமாக அங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
170 இடங்களில் போராட்டம் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லேண்ட், அட்லாண்டா ஆகிய நகரங்களிலும் வன்முறை பரவி உள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 170 இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் கருப்பினத்தவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலைவீசி வருகிறது. “கருப்பினத்தவரே! எங்களுடன் இணையுங்கள்- நங்கள் உங்களை பாதுகாப்போம்!” என பெர்குசன் போராட்டக்காரர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது.
சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.ஐ எஸ். இயக்கம் கருப்பினத்தவருக்கு இத்தகைய அழைப்பை தொடர்ந்து விடுத்து வருவது அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.