இன்று இருக்கும் நாடாளுமன்றத்தில் தனியாக ஆட்சியைக் கோரும் அதிகார பலம் எந்தக் கட்சிக்கும் இல்லை என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலேயே அனைவரும் இப்போது பேசுகின்றனர். நான் அதற்கு ஆதரவு வழங்கியதாகச் சிலரும், ஆதரவு வழங்கவில்லை எனச் சிலரும் கூறுகின்றனர். ஆகையால் என்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.
இன்று காலை, கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், சில கட்சிகள் தங்களுக்குப் பலம் கிடைத்துவிட்டதாகக் கருதினர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எந்தவொரு கட்சியும் 40 சதவீதத்துக்கு மேல் வாக்கினைப் பெறவில்லை. சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமார் 15 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. எமக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் சுமார் 30 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.
“நிலைமை இவ்வாறிருக்கையில், தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் தாங்கள்தான் வெற்றிபெற்றவர்கள் என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இதேவேளை, பொது எதிரணியில் இருப்பவர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கைக்கிணங்க, அவர்களைச் சந்தித்தபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாகவும், அதனூடாக பிரதமர் பதவியைத் தமக்குத் தரவேண்டும் எனவும் கோரினர்.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா இல்லையா என்பதை நாடாளுமன்றத்தில் நிரூபியுங்கள் என்று கூறினேன். அதற்கான பிரதிபலன் எவ்வாறு அமைந்தது என்பது யாவரும் அறிவீர்கள்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிரதமர் வெற்றிகொண்டதன் பின்னர் தனியாட்சி சாத்தியமா எனக் கேட்கின்றனர். என்னைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடையாது. ஆகையால் கூட்டாட்சி ஒன்றே சாத்தியமானது. எனவேதான், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்கின்றோம்.