தேசியப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு 13 வது திருத்தம் அல்ல என்றும் தேசியப் பிரச்சினை தீர்வில் இந்தியா முழுமையாக உதவ வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். யாழ். நூலகத்தில் இடம்பெற்ற யாழ். கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மங்கள சமரவீர, கரு ஜயசூரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்களான பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இறுதித் தீர்வல்ல. அதிகாரப் பகிர்வே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள போதும் இதில் நாம் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
13 வது திருத்தமானது பலமிழக்கச் செய்யப்பட்ட ஒன்றாகவே உள்ளது. சமத்துவம், சகலரும் சம உரிமையுடன் கெளரவத்துடன் வாழ்வது உறுதி செய்ய ப்பட வேண்டும். மத்திய அரச நிர்வாகமும் மாகாண அரச நிர்வாகமும் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் மக்களை முன் கொண்ட கொள்கைகள் மற்றும் உங்களது தலைமைத்துவத்தின் காரணமாக மக்கள் எதிர்பார்த்த இலக்கை எட்ட முன்னோக்கி செல்ல முடிகிறது. இதற்கு இந்திய அரசியலமைப்பின் வடிவமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
நியாயமான அதிகாரப் பகிர்வு கார ணமாக அந்த கொள்கையை வெற்றி கரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. குஜராத்திற் கான உங்கள் எதிர்கால இலக்கில் நீங் கள் பல்துறைகளிலும் வெற்றிகரமாக முன்னேற உங்கள் கொள்கைகள் உறுது ணையாகியுள்ளன.
இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையில் சகல துறைகளிலும் குறிப்பாக வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற வேண்டியுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சம் மக்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றனர். அதற்காக நான் இந்திய பிரதமருக்கு நன்றி கூறுகின்றேன்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.
இலங்கையின் தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா முழுமையான உதவி வழங்க வேண்டியது முக்கியமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 ற்கு அப்பால் சென்று பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாகத் தெரிவித்தார். அது நிறைவேற்றப்படவில்லை.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான உதவியினை இந்தியா வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இராமர் காலத்திலிருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் உள்ளன. இந்த உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.