அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் இலங்கை முன்னாள் அமைச்சரும் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சேவை அந்நாடு விரைவில் நாடு கடத்தக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜபக்சே ஆட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிதி மோசடி காவல்துறை விசாரணை பிரிவு பசில் ராஜபக்சேவை தேடி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடம் பசிலை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை விடுத்துள்ளது. குறிப்பாக திவிநெகும திட்டத்தின் போது பசில் ராஜபக்சே பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக முழுமையான தகவல்களை திரட்டுவதற்கு பசில் ராஜபக்சேவை விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக நிதி மோசடி தொடர்பான விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக இண்டர்போலின் உதவியை நாடவும் இலங்கை முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்தே பசில் ராஜபக்சே இலங்கைக்கு விரைவில் நாடு கடத்தப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.