உயர்தரத்துக்குள் நுழைய 73.05 வீதமானவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 10,000 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 A சித்தி !

0
177

2017 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சுமார் 10,000 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 A சித்தி பெற்றுள்ளனர். இதற்கு அமைய க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சிறீலங்கா கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வருடம் உயர்தரத்துக்குள் நுழைய 73.05 வீதமானவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டு சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 69.94 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றனர். இம்முறை 73.05 வீதமானவர்கள் தகுதியடைந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்தரத்துக்கு தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 3.11 வீத வளர்ச்சியடைந்துள்ளது.
கணிதபாடத்தில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிதபாட சித்தியானது 4.43 வீதத்தால் அதிகரித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார் .
2016ஆம் ஆண்டு கணிதபாடத்தில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 62.81 வீதமாகக் காணப்படட நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 67.24 வீதமாக அதிகரித்துள்ளது.
2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8224 ஆகக் காணப்பட்டபோதும், இம்முறை 9960 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நாடு முழுவதிலுமிருந்து 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் தோற்றியிருந்தனர்.
பரீட்சார்த்தி ஒருவர் தனது பெறுபேறுகளை மீளாய்வுசெய்ய விரும்பினால் பாடசாலை பரீட்சார்த்தியாயின் ஏப்ரல் 7ஆம் திகதிக்கு முன்னரும், தனிப்பட்ட பரீட்சார்த்தியாயின் ஏப்ரல் 12ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here