சென்னையில் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீபகாலமாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி கோஷ்டியாக மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கல்லூரி வளாகத்தைத் தாண்டி, பொது இடங்களிலும் இவர்களது சண்டை தொடர்வதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்தவகையில், இன்று காலை 9 மணி அளவில் நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மேலும் சில மாணவர்கள் அங்கு வந்தனர்.
இரண்டு கோஷ்டியாக நின்ற அவர்களுக்குள் திடீரென கடும் வாக்குவாதம் உண்டானது. பின்னர், ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்கள். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தி-அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்ளுடன் ஒரு கோஷ்டி, மற்றொரு கோஷ்டியை வெட்ட பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர் கோஷ்டி மாணவர்கள் உயிரைக் காத்துக் கொள்ள பீதியுடன் ஓடத் தொடங்கினர். ஆனால், தொடர்ந்து ஆயுதங்களைக் கொண்ட கும்பல் துரத்தியது. மாணவர்கள் ரோட்டிலும், அருகில் உள்ள கட்டிடங்கள், வளாகங்களிலும் புகுந்து ஓடினார்கள். இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடி தலைமறைவானார்கள். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் எந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.