கடந்த வெள்ளிக்கிழமை (23) பிரான்சில் பயங்கரத் தாக்குதல் நடத்தி பல்பொருள் அங்காடியில் மக்களை பணயம் வைத்திருந்த போது தன் உயிரைப் பணயம் வைத்து, மக்களை மீட்கும் போது படுகாயமடைந்து மறுநாள் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரி லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame க்கு, இராணுவ மரியாதையுடன் தேசிய அஞ்சலி இன்று (28) இடம்பெற்றது.
பரிசின் Hotel des Invalides இல், இராணுவ அணி வகுப்புடன், பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மக்ரோன் ‘ஜோந்தாம் அதிகாரி தன் உயிரை பணயம் வைத்து, பிரெஞ்சு மக்களை காப்பாற்றியுள்ளார். பிரான்சை வியக்கவைத்துள்ளார்!’ என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வீரருக்கான இந் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகள் நிக்கோலா சர்கோஷp, பிரான்சுவா ஒலோந்து மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். பணய நாடகத்தில் பாதிக்கப்பட்டோர், உறவினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என 400 பேர்வரை நிகழ்வுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிரெஞ்சு கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.