2009 இல் கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டிதாக கைதான இருவருக்கு இன்று விடுதலை !

0
225


சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய , முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று (27 )விடுதலை செய்தது.
குறித்த இருவராலும் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மையப்படுத்தி தக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர் தவறிவிட்டதாக கூறி, பிரதிவாதிகளின் சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை அளித்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்தார்.
கிரிதரன், கிரி, கண்ணன் மற்றும் தாஸ் ஆகிய பெயர்களால் அறியப்படும் கணகரத்தினம் ஆதித்தன் , இம்பன், தம்பி, கோபால் ரத்னம், தயாபரன் ஆகிய பெயர்களால் அறியப்படும் கந்தகவனம் கோகுல்நாத் ஆகியோரே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மேற்படி இருவருக்கும் எதிராக 2011 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் பயங்கரவாத தடை சட்ட விதிவிதாங்களுக்கு அமைவாக மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
2009 ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் நவம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபயவையும் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டியதுடன் தியத்தலாவையில் வைத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலைசெய்ய சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அது தொடர்பில் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே இன்று நீதிபதி தீர்ப்பறிவித்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here