முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு மற்றும் கேப் பாபிலவில் சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தினர். தமது குளத்து நீரை சிறீலங்கா இராணுவத்தினர் பாவிப்பதை நிறுத்து மாறு கோரி உடை யார்கட்டிலும், தமது காணிகளை விட்டு வெளியேறுமாறு கோரி கேப்பாபிலவிலும் மக்களால் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டுக் குளத்தில் சிறீலங்கா இராணுவம் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்தக்கோரி அந்தப் பகுதி மக்கள் விவசாயிகள் நேற்று (21) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
உடையார்கட்டுச் சந்தியில் நேற்றுக் காலை 9 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. சிறீலங்கா இராணுவம் குளத்து நீரை எடுத்து தங்களது பண்ணைக்கு இறைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் கலந்து கொண்டார்.
வடக்கு மாகணத்தில் சிறீலங்கா படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேப்பாபிலவில் இறை வழிபாட்டுடன் நேற்றுக் கவனவீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள், பங்குத் தந்தைகள், அருட்தந்தையர், அரசியல் தலைவர்கள், காணிகளைப் பறிகொடுத்த மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் கவனயீர்பிலும் கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்கு ஆரம்பமான இறைவழிபாடுகளும், கவனயீர்ப்பும் நண்பகல் நிறைவடைந்தது. கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை ஒன்று கூடி ஆத்மசாந்தி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
‘தமிழர் தாயகத்தில் சிறீலங்கா இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரியும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதிவேண்டியுமே வழிபாடு முன்னெடுக்கப்பட்டது. நாம் அநியாயமான முறையில் போராடவில்லை. எமது போராட்டங்களுக்கு இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்களும் ஆதரவு தர வேண்டும்’ என்று கேப்பாவிலவு நிலமீட்புப் போராட்டத்தை முன்னின்று செயற்படுத்தும் ஆறுமுகம் வேலாயுதம் கேட்டுக் கொண்டார்.