தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் பழமையானது!

0
270

தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என ஆய்வறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் தான் மிகப் பழமையானது என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் ”மேக்ஸ் பிளான்க்” அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி சார்ந்த ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டன.
இந்தியாவின் ஆதி இனமாகக் கருதப்படும் திராவிடர்களின் மொழியியலை அவர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர்.
தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிகள் குறித்தும், அவற்றிலிருந்து பிரிந்து புதிதாக உருவான கிளை மொழிகள் குறித்தும் அவர்கள் பல்வேறு தரவுகளைச் சேகரித்தனர்.
கிழக்கே வங்கதேசத்தில் இருந்து மேற்கே ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் தெற்காசியப் பகுதியானது குறைந்தது 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் முதன்மையானதும், பழமையானதுமான திராவிட மொழிக்குடும்பம், சுமார் 80 மொழிகளை உள்ளடக்கியது. ஏறத்தாழ 22 கோடி மக்கள் அம்மொழிகளை தற்போது பேசுகின்றனர். தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவில்தான் அவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தில் பழமையான மொழி தமிழ் தான். அதைத் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக உள்ளன. அம்மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியவை.
உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சம்ஸ்கிருதத்தைப் போல சிதைந்து போகாமல் அதன் காப்பியங்களும், கல்வெட்டுகளும் முற்காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்ந்து காணக்கிடைக்கின்றன.
பூகோள அடிப்படையில் திராவிட மொழிகளின் தோற்றம் எங்கு என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை; அதேபோன்று, எந்தக் காலத்தில் அவை தோன்றின என்பதை அறுதியிட்டுக் கூறவும் இயலாது. அதேவேளையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சில சான்றுகளின்படி ஆய்வு செய்ததில், ஆரியர்கள் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்பது தெரிகிறது.
இந்த விடயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்தொற்றுமையும் உள்ளது. மேலும், சில தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது.
என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here