பெற்றோர் நீதிமன்றில் வந்து அழுது மன்றாடுவதால் எந்தப் பிரயோசனமுமில்லை!

0
421


பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோரின் கடமை. பிள்ளைகள் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவதால் கைது செய்யப்பட, பெற்றோர் நீதிமன்றில் வந்து அழுது மன்றாடுவதால் எந்தப் பிரயோசனமுமில்லை. இலங்கைச் சட்டத்திலுள்ள உரிமைகளின் அடிப்படையில் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படுவதால் அவர்கள் வெளியே வந்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற நிலைதான் காணக்கூடியதாக உள்ளது”
இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்..
கைக்குண்டை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பம் மீதான தீர்ப்பின் போதே மேல் நீதிமன்ற நீதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் .
சந்தேகநபர் அன்றிலிருந்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரப் பட்டது.
பிணை விண்ணப்பம் மீதான தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (22) வழங்கினார்.
“சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபா பணத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும்.சந்தேகநபர் சார்பில் தலா 5 லட்சம் பெறுமதியுடைய 2 ஆள் பிணையாளிகள் கையொப்பமிட வேண்டும். ஆள் பிணையாளிகள் நீதிவானால் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். சந்தேகநபர் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” ஆகிய நிபந்தனைகளின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கிக் கட்டளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here