ஐவைந்து ஆண்டின் பின் பிரதமராய் பாரதப் பக்கமிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் கரணமென்னவோ??
காலம் கடந்து தான் ஞானம் வருமாம்; ஆனால் உமக்கும் அப்பிடியோ??
ஓ, எங்களைக் கொன்று குவிக்க குண்டும் கொடுத்து, இராணுவத் தளபாடங்களையும், கூடவே இராணுவத்தையும் கொடுத்த உம் நாட்டின் பாவங்களை கழுவுவதற்கோ??
இல்லை வேலைக் களைப்பில் சலிப்பாய் இருந்தமையால் சும்மா ஒரு ஓய்வு நேர விஸிட் ஓ?
இல்லை இல்லை அயல் நாடென நீவிரிருக்க சைனாவும் ஜப்பானும் இலங்கையைப் பங்கு போட முயற்சிப்பதன் மீதான ஆத்திரமோ??
உம் நாடு கொடுத்த வீடெல்லாம் முன்னைய அரசின் ஒட்டுண்ணிகளினால் பாதிக்கப்பட்டோர் பலரிருக்க பாதிக்கப்படாத ஐந்தாறு வீடு வைத்திருக்கும் தம் கட்சி சார்ந்தவர்களுக்கு கொடுத்தமை அறிந்தீரோ??
ஐயா உம் தேசம் சைக்கிள் கொடுத்ததாமே, வீட்டில் சைக்கிளே இல்லாதவன் அப்படியே இருக்க மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவனெல்லாம் அதை ஓடித்திரிகிறார்களாமே, அறிந்தீரோ??
வடக்கு கிழக்கிற்காய் இந்தியா ஏதோ தீர்வு திட்டம் தந்ததாமே; அது சரியாய் நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்ன நடக்கின்றது என்று சும்ம ஒரு “செக்” செய்யுங்களேன்.
ஓ மோடியாரே, இந்தியப் படைக்காய் நினைவுத் தூபியில் அஞ்சலித்தீராமே; உம் நாட்டுப் படைகளால் கொல்லப்பட்ட நம்மூர் மக்களுக்காயும் ரெண்டு பூ போட்டிருக்கலாமே
அவையெல்லாம் வேண்டாம், கீரிமலைக்கு வீடு திறப்பதற்காய் போகின்ற வழிகளிலும் யாழ் நூலக நிகழ்விற்கும் போகும் போதும் மக்களையும் கொஞ்சம் சந்தித்து பேசினால் கொஞ்சம் உண்மைகளும் வெளி வரலாமே…!
ஐயா மோடியரே, இரு நாட்டிலும் மாற்றம் கொண்டு வந்த மக்கள் எதற்காய் மாற்றினார்கள் அறிந்தீரோ.
எமக்கு வீடும் வேண்டாம் சைக்கிளும் வேண்டாம் சின்ன சின்ன பிச்சைகளும் வேண்டாம் சொந்த இடத்தில், நிம்மதியாய், நாம் நாமாக வாழ வழி செய்தாலே போதும் பாருங்கோ.
ஆக குறஞ்சது இதயாச்சும் செய்யுங்கோ; இல்லாட்டி வழமையாய் சும்மா விசிட் வந்து போற ஆக்கள் எண்டு தான் உங்களையும் நினைப்பீனம் பாருங்கோ……!
– யாழ் உஷாந்தன்.