இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்குவிஜயம் செய்கின்றார்.
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் இந்திய பிரதமர் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சில வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளதுடன் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்துக்கான அடிக் கல் நாட்டும் வைபவத்திலும் கலந்துகொள்வார்.
மேலும் வடக்கு மாகாண ஆளுநரின் பகலுணவு விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவுள்ள இந்திய பிரதமர் யாழ்ப்பாணம் நூலகத்துக்கும் செல்லவுள்ளார்.
அத்துடன் இன்று மாலை கொழும்பு திரும்பும் இந்திய பிரதமர் மோடி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அனுராதபுரம்
இன்று சனிக்கிழமை தினத்தன்று நிகழ்வுகள் முழுமையாக கொழும்புக்கு வெளியில் நடைபெறும். முதலாவதாக மோடி அனுராதபுரத்துக்கு விஜயம் செய்வார். அங்கு சிறிமஹா போதியில் வழிபாடுகளை மேற்கொள்வார். மகிந்த மற்றும் சங்கமித்தை ஆகியோர் வருகை தந்த புனித இடமாக அனுராதபுரம் காணப்படுகின்றது.
தலைமன்னார் விஜயம்
அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்வார். தலைமன்னார் என்பது வரலாற்று ரீதியாகவே இந்தியாவுடன் தொடர்புபட்ட மிக அருகில் உள்ள பிரதேசமாகும். இந்திய பிரதமர் மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைப்பார். தலைமன்னார் மடுரோட் ரயில் சேவையையும் இந்திய பிரதமர் திறந்து வைப்பார். இந்த ரயில் பாதையை இந்திய நிறுவனம் நிர்மாணித்தமை விசேட அம்சமாகும்.
யாழ் விஜயம்
அந்த நிகழ்வுகளின் பின்னர் தலைமன்னாரிலிருந்து இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார். யாழ்ப்பாணத்தில் இரண்டு முககிய நிகழ்வுகள் உள்ளன. முதலாவதாக யாழ்ப்பாண கலாசார நிலையததை நிர்மாணிபப்பதற்கான அடிக்கல் இந்திய பிரதமரினால் நாட்டப்படும்.
ஆளுநர் சந்திப்பு
அதன் பின்னர் வடக்கு ஆளுநரினால் வழங்கப்படும் பகலுணவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சில வீடுகளை பயனாளிகளுக்கு இந்திய பிரதமர் கையளிப்பார். இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்படும். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
மு.கா. சந்திப்பு
யாழ்ப்பான விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பவுள்ள பிரதமர் மோடி கொழும்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பி்ரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்துவார்.
இ.தொ.கா சந்திப்பு
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய வம்சாவளி தலைவர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார்.
அதன் பின்னர் சனிக்கிழமை இரவு இலங்கைக்கான இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்தில் அவர் பங்கேற்பார். அதன் பின்னர் இந்திய பிரதமர் புதுடில்லி நோக்கி பயணிப்பார்.