சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
”இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது தானே” என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் கேள்வியெழுப்பிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா என்றும் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக் கும் என உறுதிபடத் தெரிவித்தார். ஆட்சி மாற்றம்
இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயங்களில் மாற்றம் அவசியம் என வலியுறுத்திய இந்தியப் பிரதமர் பொறுமைகாத்து அடுத்த விடயங்களை முன்னெடுப்பது அவசியம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 6மணிக்கு கொழும்பு தாஜ்சமுத்திர ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். சுமார் அரைமணி நேரம் நீடித்திருந்த இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழரசுக்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தாக குறிப்பிட்டார்.
அதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வௌியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாரர்ளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரமசந்திரன் தெரிவித்திருப்பதாவது,
இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுகின்ற போது வட கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விடயம். இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வட கிழக்கு இணைப்பு என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் முன்னாள் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டது.
வடகிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்று புர்வமான தாயகப்பிரதேசம். ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு வடகிழக்கு இணைப்பு என்பது முக்கியமாகும். மக்கள் முளுமையாக குடியேற்றப்பட வேண்டும். சொற்ப அளவிலேயே மக்கள் மீள் குடியேற்றப் பட்டுள்ளனர். இன்று தான் அதுவும்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகுதி எப்போதுநடக்கும் என்பது தெரியாது ஆகிய விடயங்களை உள்ளடக்கிய கருத்துக்களை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்து விளக்கினோம்.
அதன்போது கருத்து வௌியிட்ட இந்தியப்பிரதமர் இலங்கை ஜனாதிபதியை நான் சந்தித்தேன். அவர் காணி மற்றும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார். அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன் ஆனால் இவை தொடர்பில் ஜனாதிபதி ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்.
இது ஒரு புதிய அரசாங்கம் ஆகவே நீங்கள் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொறுமை தேவை. முன்னர் ஏனைய அரசாங்கங்களேடு அனுகியதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தோடும் அனுகக்கூடாது இந்த அரசாங்கம் பல மாற்றமான கருத்துக்களை கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயக் குழு இவை தொடர்பில் விரிவாக ஆலோசித்து புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும் என்றார்.
இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருகின்றது தானே” என எம்மிடத்தில் அவர் வினவியபோது நாம் ஆம் என பதிலளித்தோம். அதனைத்தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செயற்பட வேண்டுமென எமக்கு ஆலோசனை வழங்கினார். இந்தியப்பிரதமர் இலங்கையின் புதிய அரசு மீது நிறைவான நம்பிக்கை வைத்திருப்பதை எம்மால் உணரமுடிந்தது. இந்திய பிரதமர் இலங்கை அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக இலங்கை அரசு செயற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்றார்.
இச்சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில்,
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றையதினம்(நேற்று) பாராளுமன்றில் உரையாற்றுகையில் கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார். அவ்விடயம் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார்.
அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம். அதன்போது இந்தியப்பிரதமர் இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் உறுதிபடத் தெரிவித்தார்.
அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்குவது அவசியம். கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பாங்கான போக்கினை கொண்டிருந்தது. ஆகவே புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகின்றது. ஆகவே நீங்கள் பொறுமையும் கடந்த காலத்தில் மேற்கொண்ட அனுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அனுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது ஆலோசனையையும் எமக்கு வழங்கினார் என்றார்.