ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தால் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (16) இடம்பெற இருந்த இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விவாதம் உட்பட அனைத்து நிகழ்வுகளும் இரத்தானது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி 37ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நேற்று விவாதம் நடைபெறவிருந்தது. இலங்கை மாத்திரமன்றி வேறு பல நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் பற்றியும் விவாதம் நடத்த ஏற்பாடாகியிருந்து.
ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் முன்னெடுத்த ஒருநாள் வேலைநிறுத்தத்தினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வுகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டன. இதனால் இலங்கை பற்றிய விவகாரமும் இரத்தாகியுள்ளது.
சம்பள உயர்வுகோரி வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது குறித்த தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும் ஆயிரம் பணியாளர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இத்தீர்மானத்துக்கு எதிராக 120 பணியாளர்கள் மாத்திரம் வாக்களித்தனர். இதனால் மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அனைத்து செயற்பாடுகளும் இரத்தாகின.