மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் !

0
109


ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு சிறீலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கருதகிறீர்கள்? என கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போர்குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக சிறீலங்கா அரசாங்கம் பசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்களை தண்டிக்காது. மாறாக அவர்களை மன்னிக்கும். இதற்கு சிறந்த உதாரணம் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பப்பட்டபோது காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் எனவும் இறந்துவிட்டார்கள் எனவும் பதிலளித்த சிறீலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அதனை சிறீலங்கா அரசாங்கம் ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுவார்கள். அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது.
எனவே நான் 2015 ஆம் ஆண்டும் 2017 ஆம் ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். சிறீலங்காவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி.

அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன். மேலும் சிறீலங்கா தொடர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டுவந்தது. அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டுவந்ததாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள்.

அதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தது போன்ற பல்வேறு பூகோள நிலமைகளை கருத்தில் கொண்டே பிரேணை கொண்டுவந்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டுவந்தோம் என பாசாங்கு செய்தாலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது.

சிறீலங்கா தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட பிரேரணையை கொண்டுவந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும்.

அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here