சிறப்பு திட்டங்களின் மூலம் படிப்படியாக, டீசல் கார்களை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு மேற்கொள்ள உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மொத்தம் இருக்கும் கார்களில் 80 சதவீதம் டீசல் கார்களே இருக்கின்றன. இந்தநிலையில், டீசல் கார்கள் வெளியேற்றும் கார்பன் புகையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக டீசல் கார்களை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கு பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் டீசல் கார்களை படிப்படியாக குறைப்பதற்கு பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் குறிப்பிடுகையில்,” டீசல் கார்கள் மீது அதிக விருப்பம் கொண்டதன் விளைவை உணர்ந்துகொண்டுள்ளோம். இந்த தவறை புத்திசாலித்தனமாக படிப்படியாக குறைப்போம்,” என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் ஒரு லிட்டர் டீசலுக்கு 2 யூரோ சென்ட் கூடுதல் கலால் வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மேலும், எலக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கு 10,000 யூரோக்கள் வரை சேமிப்புச் சலுகைகளை வழங்கவும் பிரான்ஸ் அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.