இந்தியாவை அதிரவைத்த விவசாயிகளின் 180 கி.மீ தூர பிரமாண்ட பேரணி!

0
409


விவசாயிகளின் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கிலிருந்து தொடங்கி மும்பை வந்தடைந்துள்ளது விவசாயிகளின் பிரமாண்ட பேரணி. இடதுசாரிகளின் விவசாய அமைப்பான, ‘அகில இந்திய கிஷான் சபா’ இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வழி நெடுகிலும் விவசாய பேரணிக்கு ஆதரவு அதிகரித்தபடியே இருந்தது. கடந்த 6ம் தேதி நாசிக்கில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி 5 நாட்களில் சுமார் 180 கி.மீ தூரத்தை கடந்து தானே-மும்பை எல்லைக்கு இன்று (11) வந்தடைந்துள்ளது.
மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டசபையை நாளை இந்த விவசாயிகள் முற்றுகையிட உள்ளனர். சுமார் 15000த்துக்கும் அதிகமானோரால் ஆரம்பிக்கப்பட்ட பேரணிக்கு சிவசேனா, மகாராஷ்டிரா நவ நிர்மான், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. விவசாயிகள் நடைபாதையாக வரும் வழியெங்கும் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்தபடியே இருந்தது.
இன்று விவசாயிகள் மும்பை எல்லைக்கு வந்தடைந்தபோது, சுமார் 35000 பேராக பேரணியில் பங்கேற்றுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

நாளை மும்பையில் சட்டசபையை அவர்கள் முற்றுகையிடும்போது இந்த எண்ணிக்கை 50000த்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மும்பை காவல் துறையினர்  இன்றும், நாளையும் மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். போக்குவரத்தை மாற்று பாதைகளில் திருப்பி வருகிறார்கள்.
தொடருந்து  நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின விவசாயிகளும் இதில் பெருமளவில் கலந்து கொண்டனர். தங்களுக்கு வாழ்வா? சாவா? பிரச்னை இது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், வன உரிமை சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைக்கிறார்கள்.
பகல் நேர சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இந்த பேரணி நடைபெற்று வந்தது. காலையில் சூரியன் உதயமாகும் முன்பாக துவங்கும் நடை பயணத்திற்கு நண்பகலில் சில மணி நேரம் ஓய்வு வழங்கப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. இரவு வெட்டவெளியில் படுத்து தூங்கி இந்த பாதயாத்திரையை விவசாயிகள் நடத்தியுள்ளனர். விவசாயிகளின் தீர்க்கமான இந்த போராட்டம் மகாராஷ்டிராவை குலுங்க செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here