கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா இராணுவம் அதனை விடுவித்து தாம் அதில் வாழ அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவுற்ற நிலையில் முடிவின்றி தொடர்கின்றது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த இவர்களின் போராட்டம் இன்றுடன் ஒருவருடம் நிறைவை எட்டியுள்ளது.
ஒரு தொகுதி மக்களின் காணிகள் விடுவிக்கபட்ட நிலையில் மிகுதி மக்களின் 181 ஏக்கர் வாழ்விட நிலங்கள் விடுவிக்காமல் உள்ளது. இதனால் மீதி தமது நிலங்களையும் சிறீலங்கா இராணுவம் விடுவிக்க வேண்டும் என கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயில் முன்பாக ஒரு வருடமாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு வருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அழைத்த கேப்பாபுலவு மக்கள் தமக்குரிய நிலங்களை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடக்கு மாகாண அமைச்சர் சிவநேசன் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன்,புவனேஸ்வரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் வருகை தந்து மக்களோடு கலந்துரையாடியிருந்தனர்.
இதனை தொடர்ந்து மக்களால் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்க பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிறீலங்கா காவல்துறையினரும் அதிகளவில் குவிக்கப் பட்டு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.