சிரியாவில் நடைபெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (01) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக .இளைஞர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிரியாவில் இடம்பெற்று வரும் யுத்ததினால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதே போன்ற அழிவை ஈழத்தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜ.நாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல், பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு, 2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனவீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.