சிறீலங்காவின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த இராணுவத்தினன் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சிறீலங்காவிற்கு அழைத்துவரப்படவுள்ளார் என்று சிறீலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு சிறீலங்கா அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே இராணுவப்பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் இராணுவப் பேச்சாளரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார், அதாவது ‘சிறீலங்காவின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு சமிக்ஞை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான சர்ச்சையுடன் சம்பந்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்க மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளாரா? என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சிறீலங்கா இராணுவப் பேச்சாளர், புலம்பெயர் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக இவர் அழைத்துவரப்படவில்லை என்றும் மீண்டும் மீண்டும் இச்சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட விடயம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இவர் அழைத்துவரப்படவுள்ளார். இது இராஜதந்திர ரீதியில் இடம்பெறும் வழமையான நடைமுறையாகும் என்றும் அவர் மேலும் தெரிவிததுள்ளார்.