காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒப்படைக்குமாறுகோரி நாம் நடத்தும் தொடர் போராட்டம் ஒரு வருடத்தை எட்டவுள்ளது. அது பற்றிய உறுதியான பதில் இன்னும் எமக்கு வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் எமக்கு என்ன தான் தீர்வு?
இவ்வாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டத்தில் நேற்றுத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றி லில் நாம் நடத்திவரும் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது.போர்க் காலத்திலும், போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் சிறீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை 19ஆம் திகதி அன்று ஒரு வருடத்தை எட்டுகிறது. இந்த நிலையில் எந்தவித தீர்வுகளும் எட்டப்படவில்லை. ஆகையால் எங்களின் போராட்ட வடிவத்தை மாற்றப் போகின்றோம்–என்றார்.